ஸ்மார்ட் போன் உலகுக்கான புதிய வரவு சற்றும் எதிர்பாராத திசையில் இருந்து நிகழ இருக்கிறது. ஒரு காலத்தில் புகைப்படம் என்றாலே நினைவுக்கு வரும் பெயராக இருந்த கோடாக் தான் அது. புகைப்படச் சுருள் வழக்கொழிந்து போன டிஜிட்டல் யுகத்தில் கோடாக் பெரும் சோதனையைச் சந்தித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் எப்படியே தாக்குப் பிடித்து நிற்கக் காரணம் அதன் வர்த்தக நோக்கிலான பிரிண்டிங் மற்றும் மறக்க முடியாத பிராண்ட் பெயர்தான்.
அந்த பிராண்ட் பலத்துடன்தான் இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் நடைபெற இருக்கும் புகழ்பெற்ற சி.இ.எஸ் தொழில்நுட்பக் கண்காட்சியில் கோடாக்கின் ஸ்மார்ட் போன் அறிமுகமாக இருக்கிறது. தொடர்ந்து 4ஜி போன் மற்றும் டேப்லெட் சாதனம் ஆகியவையும் அறிமுகமாக உள்ளன. ஆனால் கோடாக் இவற்றைத் தயாரிக்கவில்லை.
இதற்காக புல்லிட் குழுமம் ( Bullitt Group) எனும் பிரபல நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இந்த நிறுவனம் தான் கோடாக் பெயரில் ஸ்மார்ட் போனைத் தயாரிக்க உள்ளது. கோடாக் பெயரைத் தாங்கி வரும் இந்த போன் புகைப்படம் அச்சிடும் மற்றும் பகிர்வுக்கான பிரத்யேக வசதிகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போனாக இது இருக்கும்.
நவீன போன் வேண்டும்; ஆனால் அது சிக்கலானதாக இருக்க கூடாது என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட் போன் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த வரிசையில் நவீன வசதிகள் கொண்ட கேமராவும் அறிமுகமாக உள்ளது.