உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய போட்டியான இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆக்ரோஷமான போட்டி இன்று அடிலெய்டு நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்த போதிலும், அடுத்து பேட்டிங் செய்த விராத் கோஹ்லி மற்றும் தவான் ஆகியோர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
விராத் கோஹ்லி 107 ரன்களும், தவான் 73 ரன்களும், சுரேஷ் ரெய்னா 74 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சோஹெய் கான் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்
301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் அபார பவுலிங் மற்றும் பீல்டிங்கில் தாக்கு பிடிக்க முடியாமல் 47 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அகமது சேஜாத் 47 ரன்களும், ஹரீஸ் சோஹெல் 36 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். யாதவ் மற்றும் ஷர்மா தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
107 ரன்கள் எடுத்த விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்தியாவை இதுவரை பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.