இன்று நடைபெற்ற கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் கடும் மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா மாநகராட்சி தேர்தலின் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்குகள் விறுவிறுப்பாக பதிவாகி வருகின்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், கொல்கதாவின் மையப்பகுதியில் உள்ள முக்கிய வாக்குச்சாவடி ஒன்றில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு கட்சியினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட பலர் காயமடைந்ததால் பெரும் பதட்டம் நிலவியது.
இதையடுத்து, போலீசார் லேசான தடியடி நடத்தி இரு கட்சி தொண்டர்களையும் விரட்டியடித்தனர். இந்த மோதலால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பெயரை கெடுத்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தலைநகரான கொல்கத்தா மாநகராட்சியை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல் அதற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றே ஆளுங்கட்சி கருதுகிறது. இதனால் மாநகராட்சியை கைப்பற்றி, மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்க வேண்டும் என்பதற்காக பல மாதங்களாக பாரதிய ஜனதா கட்சி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டது.