இந்தியாவில் 8வது ஐ.பி.எல் போட்டிகள் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியது. நேற்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி, கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரரான ரோஹித் சர்மா மிக அபாரமாக விளையாடி 98 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். 65 பந்துகளில் 12 பவுண்டரிகளும், 4 சிக்சர்களுடனும் அவர் இந்த ரன்களை வித்தார். ஆனால் பின்ச், தாரே, ராயுடு ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ஆண்டர்சன் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் உத்தப்பா 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன் பின்னர் விளையாடிய கவுதம் காம்பீர், பாண்டே, யாதவ் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் மார்க்கல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதவுள்ளது.