சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.100 கோடி ரூபாய் அபராத தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் இன்று மெளன உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு இன்று காலை 9 மணி முதல் தமிழ்த் திரையுலகினர் தங்களது மெளன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி விட்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கேயார், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, அபிராமி ராமநாதன், நடிகை சச்சு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். சமீபத்தில் திமுகவில் இணைந்த பாக்யராஜும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்.
ஆனால் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா போன்றவர்கள் இன்னும் உண்ணாவிரத போராட்டத்திற்கு வரவில்லை. அவர்கள் கூடிய விரைவில் வருவார்கள் என கூறப்படுகிறது.