கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள படம் கொம்பன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவினருக்கு கொம்பன் படத்தை திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துக்களை பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ’கொம்பன்’ படம் ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினருக்கு நேற்று திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த அவர்கள் அதற்கான உரிய அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் மூலமாக மதுரை கிளைக்கு அனுப்பி வைத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கப்படவிருக்கிறது. இதனிடையே நேற்று சென்னை பிலிம் சேம்பரில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தை அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக, இன்றுவெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இப்பிரச்னையில் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என ஒட்டுமொத்த திரையுலகமும் ’கொம்பன்’ படத்துக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளனர். ’கொம்பன்’ படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்களும் அதிகரித்தன. கொம்பனுக்கு ஆதரவாக #SUPPORTKOMBAN என்ற ஹேஷ்டேக் மூலம் ஆதரவை தெரிவித்து வந்த நிலையில் படத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகளும் ஆரம்பாகி முழுவீச்சில் விற்று வருகின்றன.