பருத்தி வீரன் படத்தை அடுத்து கார்த்தி நடித்து கிராமத்து பின்னணி கதை. ஆனால் பருத்தி வீரனின் சாயல் சிறிதும் இல்லாமல் நடிப்பதில் கார்த்தியும், இயக்கியதில் எம்.முத்தையாவும் ரொம்பவே சிரத்தை எடுத்துள்ளனர் என்பதை படம் பார்த்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசப்பட்டியில் அடிதடி சமூக சேவை செய்யும் ஆட்டு வியாபாரி கார்த்தி. நியாயத்துக்காக பொங்கி எழும் இவருக்கு திருமணம் செய்து வைக்க அண்ணன் கருணாஸ் மற்றும் அம்மா கோவை சரளா இருவரும் சேர்ந்து ராஜ்கிரண் மகள் லட்சுமி மேனனை முடிவு செய்கின்றனர். கார்த்தி கோபக்காரர் என்றும் தெரிந்தும் நியாயத்துக்காக போராடும் நல்லவர் என்பதால் ராஜ்கிரணும் பெண் கொடுக்க சம்மதிக்கின்றார். திருமணத்திற்கு பின்பும் அடிதடியில் ஈடுபடும் கார்த்தியை ராஜ்கிரணும், லட்சுமி மேனனும் கண்டிக்கின்றனர். இதனால் ஆத்திரமடையும் கார்த்தி மாமனார் என்றும் பாராமல் அடித்து விடுகிறார்.
இந்நிலையில் அரசப்பட்டியின் ஊராட்சி மன்ற தலைவரை தேர்வு செய்வதில் அவ்வூரை சேர்ந்த பட்டாசு வியாபாரிக்கு எதிராக கார்த்தி செயல்பட்டதால் பட்டாசு வியாபாரியின் மாமனார் கார்த்தி மீது கோபமடைகிறார். கார்த்தியை பழிவாங்க ராஜ்கிரணை போட்டுத்தள்ள வில்லன் முடிவு செய்யும்போது மாமனாரை மருமகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
கார்த்தி இந்த படத்தில் கொம்பனாகவே வாழ்ந்துள்ளார். ஆட்டுச்சந்தையில் அநீதியை எதிர்த்து போராடுவதில் ஆரம்பித்து, லட்சுமி மேனனை கண்ணாலேயே காதல் செய்வது, மாமனாரை அவமதிப்பது, பின்னர் தவறை உணர்ந்து மாமனாரிடம் மன்னிப்பு கேட்பது, வில்லன்களுடன் ஆக்ரோஷமாக மோதுவது என படம் முழுவதும் கார்த்தி தனி ராஜ்யமே செய்கிறார்.
லட்சுமி மேனன் தனக்கு கொடுத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார். கண்களாலே பேசி, கண்களாலே கோபப்பட்டு இவர் நடித்துள்ள விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த படத்தின் முதுகெலுமே ராஜ்கிரண்தான். எல்லோரும் இப்படி ஒரு மாமனார் நமக்கும் கிடைக்க மாட்டாரா? என்று ஏங்க வைத்துவிட்டார். அரண்மனைக்கிளி படத்திற்கு பின்னர் மீண்டும் சாமியாடியுள்ள ராஜ்கிரண், அதே ஆக்ரோஷத்துடன் இப்போதும் இருப்பது ஆச்சரியப்பட வைக்கின்றது.
தம்பி ராமையா, கருணாஸ், கோவை சரளா, என நடிகர் பட்டாளம் ஏராளம். அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். ஜி.வி.பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் சூப்பர். பின்னணி இசையில் கொஞ்சம் இரைச்சல் அதிகம். அதை தவிர்த்திருக்கலாம்.
கிராமத்து மண்ணின் மணத்தை மிக அழகாக கேமராவில் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்புக்கு பெரும் உதவியாக இருப்பவர் படத்தொகுப்பாளர் பிரவீண் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரு கிராமத்து பின்னணி கதையில் ஆங்காங்கே டுவிஸ்ட், திருப்பங்கள், அழகான காதல், மாமனார் மருமகன் உறவு, கிராமத்தில் நடைபெறும் யதார்த்தமான சண்டைகள் என ஆடியன்ஸை ஒரு கிராமத்துக்கே அழைத்து சென்றது போன்ற உணர்வை கொடுத்துள்ளார் முத்தையா. வாழ்த்துக்கள். இருப்பினும் அவர் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். முதல் பாதியில் இடைவேளை எப்போது விடுவார்கள் என்று ரசிகர்களே குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த படம் குறித்து கடைசியாக ஒன்றை சொல்ல வேண்டும். சல்லடை போட்டு பார்த்தாலும் இந்த படத்தில் ஜாதி மோதல்கள் குறித்து ஒரு காட்சியை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு படத்தை தடை செய்ய முயற்சிகள் நியாயமானதுதானா? என்பதை அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தயவுசெய்து தங்கள் மனசாட்சியை ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.
மொத்தத்தில் ‘கொம்பன்’ வம்பு செய்பவர்களுக்கு வில்லன், மற்றவர்களுக்கு நண்பன்.