இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய போதைப்பொருள் வணிகம் செய்து வருவதாக இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கை போலீஸார் அகமத் சப்ரி என்ற போதைப்பொருள் வியாபாரியை பிடித்து அவரிடம் விசாரணை செய்தனர். அவரிடம் இருந்து 50 கிலோ போதை மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் இலங்கை வர்த்தகரான டாத்தோ முஜாஹிதீன் என்பவர் இந்த போதை மருந்து வியாபாரத்தில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இவர் கோத்தபாய ராஜபக்சேவின் மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. டாத்தோ முஜாஹிதீன் என்ற இந்த முக்கிய புள்ளி இலங்கை ராணுவ உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் நெருக்கமான தொடர்புகளும், செல்வாக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் போலீஸார் இந்த செய்தியை ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் டாத்தோ முஜாஹிதீன் மற்றும் கோத்தபயா ஆகியோர் போதைப்பொருள் வாணிபத்தில் ஈடுபட்டுள்ளதாக புகைப்படத்துடன் சிங்கள இணையதளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த செய்தி பிரபல பிரிட்டன் ஆங்கில நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளதால் தற்போது கோத்தபாயவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.