கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!

03-1430641059-koovagam-fest1-600

திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம், கூத்தாண்டவர் கோவிலில், சித்திரைப் பெருவிழா தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. விழுப்புரம் மாவட்டம், கூவாகம், கூத்தாண்டவர் கோவில் சித்திரைப் பெருவிழா, கடந்த மாதம் 21ம் தேதி துவங்கியது. முக்கிய உற்சவமான, திருநங்கையர் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆயிரக்கணக்கான திருநங்கையர், பூஜாரிகளின் கையால் தாலி கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, அரவாண் சிரசுக்கு திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கீரிமேட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புஜம் மற்றும் மார்பு, நத்தம் கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கை மற்றும் கால்களை, 21 அடி உயர தேரில் பொருத்தினர். பின், சிவலிங்க குளம் கிராமத்திலிருந்து, குடை கொண்டு வரப்பட்டு, காலை, 8:05 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான திருநங்கையர் மற்றும் பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றனர். தேர் செல்லும் பாதையில், திருநங்கையர், 108 தேங்காய்கள் வைத்தும், குவியல் குவியலாக கற்பூரங்களை ஏற்றியும் கும்மியடித்தனர். விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களையும், சில்லறை காசுகளையும் சுவாமி மீது வீசினர். பந்தலடியை தேர் சென்றடைந்ததும், அங்கு நடந்த அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கையர், தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து, விதவைக் கோலம் பூண்டு, ஒப்பாரி வைத்தனர். சிலர், தங்கம் மற்றும் வெள்ளித் தாலிகளை காணிக்கையாக செலுத்தினர். பின், அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு, தங்கள் ஊருக்கு திரும்பினர். இதைதொடர்ந்து, உறுமைசோறு (பலிசாதம்) படையல் மாலையில் நடந்தது. இதை வாங்கி சாப்பிட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால், பக்தர்கள் முண்டியடித்து வாங்கினர். இரவு, 7:00 மணிக்கு, காளிக் கோவிலில் அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Leave a Reply