கிருஷ்ணாவதாரமே ஒரு யக்ஞம்

krishna_arjun-bestt
பூதேவியும் தேவதைகளும் சென்று எம்பெருமானிடத்திலே முறையிட்டார்கள். “இந்த உலகத்திலே பாரம் அதிகமாகி விட்டது. பரமாத்மாதான் ரக்ஷிக்க வேண்டும்” என்றனர்.
பாரம் என்றால் நிறைய மரங்கள் வளர்ந்து விட்டதால் பாரமா? மலைகளினால் பாரமா? அல்லது மனித சமூகத்தினாலேயா?
இவை எல்லாம் பூமிக்கு பாரமே இல்லை. தினமும் பாபம் பண்ணியபடி சஞ்சாரம் பண்ணுகிறோமே அது தான் பாரம்.
இந்த பாரத்தைத்தான் தேவர்கள் பகவானிடத்திலே எடுத்துச் சொன்னார்கள்.
அவன் தன் உடம்பிலிருந்து இரண்டு ரோமங்கள், ஒன்று வெள்ளை, ஒன்று கறுப்பு எடுத்துக்காட்டி, “இவை இரண்டும் உங்கள் துயர் துடைக்கும்” என்று அனுக்ஹம் செய்தான்.
அவற்றுள் சுவேதம் (வெண்மை) பலராம அவதாரம். கிருஷ்ணம் (கருமை) கிருஷ்ணாவதாரம். ‘இந்த இரண்டு ரூபமாய் நான் வந்து உங்கள் துயர்துடைக்கிறேன்’ என்பதைத்தான் பரமாத்மா அப்படி உணர்த்தினான்.
விச்வஸ்ய பதி என்று கிருஷ்ணனைக் கொண்டாடுகிறோம்.
பகவான் நாராயணன்தான் வாசுதேவனாய் வந்து பிறந்தான். இந்த பலராம, கிருஷ்ண சப்தங்கள் இரண்டுமே விச்வ சப்தத்தினால் அறியப்படுகின்றன. இந்த விஷயத்தில் உபநிஷத் சொல்வது போலவே விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் சொல்கிறது. அதனால்தான் பெரியவர்களுக்கு ஸஹஸ்ரநாமத்திலே ஓர் ஈடுபாடு.
யார் பிரும்மம் என்று விசாரித்தால், தேவகி புத்ர என்று சொல்கிறது உபநிஷத். அவன் புண்டரீகாக்ஷன். சர்வத்தையும் தாங்கக்கூடிய எம்பெருமான்.
வேத, வைதீகமான முறை கிருஷ்ணாவதாரத்தில் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் பிறந்தவாறும், வளர்ந்தவாறும் எண்ணினாலே போதும், அதுவே யக்ஞப்ரகரணம்.
யக்ஞத்துக்கு சில நியமங்கள் உண்டு. அரணியைக் கடைந்து அக்னி உண்டு பண்ணவேண்டும். அந்த நாளில் நியமமாய் வாழ்ந்தவர்கள் மந்திரத்தைச் சொல்லி கையைக் காண்பித்தாலே அக்னி உண்டாகிவிடும்.
அவ்வாறு உண்டாக்கிய அக்னியை ஒரு நதியைக் கடந்து கொண்டு வர வேண்டும். நதிக்கு வலப்புறத்திலே ஒரு யக்ஞவாடிகை அமைக்கவேண்டும். அந்த யக்ஞவாடிகையிலே அக்னியை பிரதிஷ்டை பண்ண வேண்டும். அங்கே பல யாகங்கள் செய்து வேறு இரண்டு யக்ஞவாடிகைகளுக்கு அதே அக்னியைக் கொண்டு போக வேண்டும். அந்த மூன்று அக்னியிலும் நடுவிலே ஜ்வலிப்பவன் பரமாத்மா.
இப்படி விசேஷமாக யக்ஞம் செய்து சேவித்தவர்களுக்கெல்லாம் பகவான் அனுக்ரஹம் விசேஷமாக ஏற்படுகிறது.
ஆகையினாலே, “கிருஷ்ணாவதாரமும் யக்ஞமும் ஒன்றுதான்” என்று ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். இதை நாம் மனத்திலே நினைத்துப் பார்க்க வேண்டும்.
தேவகி, வசுதேவர் என்கிற அரணிக் கட்டையிலிருந்து கிருஷ்ணன் என்கிற அக்னி உண்டானான். ‘அக்னி’ என்கிற சப்தத்தினால் மறைத்துச் சொல்லப்படக்கூடியவன் பரமாத்மா.
அந்த ‘அக்னி’யை வசுதேவர் சிரசிலே எழுந்தருளப் பண்ணினார். ஆற்றைக் கடந்து வந்தார். முழங்கால் அளவுக்கு வடிந்து வருடிக் கொடுத்தாள் யமுனா நதி.ஆதிசேஷன் ஆயிரம் சிரசுகளால் குடை பிடித்தான்.
மறு கரை அடைந்து நந்தகோபனுடைய திருமாளிகையிலே காருகபத்ய அக்னி குண்டமாகிய நந்த கோபன் மாளிகையிலே கிருஷ்ணனாகிய அக்னியைப் பிரதிஷ்டை செய்தார்.
கிருஷ்ணனுடைய பால லீலைகள் மொத்தம் அந்த யாகத்திலே மந்திரமாகின்றன. பால லீலை முழுவதும் மந்திரார்த்தம்தான்! மந்திரமாக இருந்தால் புரிவதில்லை. லீலைகளாக இருந்தால் எல்லோருக்கும் புரிகிறது.
பத்து அஸ்வமேத யாகங்கள் பண்ணுகிறார் ஒருவர். அவர் உயர்ந்த பிறவியை அடைகிறார். மறுபடியும் பூலோகத்தில பிறக்கிறார். ஆனால் கிருஷ்ணனின் திருவடியை ஆச்ரயித்தவர்களுக்கு மறுபடியும் பூலோகத்தில் பிறப்பும் உண்டோ…?
ஆகையினாலே எல்லாவற்றைக் காட்டிலும் மேம்பட்டதாய் விளங்கக்கூடியது பகவத் சரித்திரமானதினாலே வேதோக்தமாய் விளங்கக் கூடியதை பகவான் தானே நடத்திக் காட்டினதனாலே, யக்ஞமே அங்கே இருப்பதாலே தேவகி நந்தன: என்று சொன்னாலே இந்த யக்ஞப்ரகரணமெல்லாம் நமக்கு நினைவு வர வேண்டும்.
அப்படி நினைவுக்கு வருமானால் கூடவே வருத்தமும் வரும். அந்த யக்ஞமெல்லாம் நம்மால் பண்ண முடியவில்லையே என்கிற வருத்தம்.
உடனே பரமாத்மா நம்மை சமாதானப்படுத்துகிறான். “நீ வருத்தப்படாதே! உன்னைச் சகல பாபங்களிலிருந்தும் நான் விடுவித்து விடுவேன்” என்கிறான். அந்த அமிர்தமான வாக்கிலே நமக்குப் பூரணமான விஸ்வாசம் இருந்து அவன் திருவடிகளைப் பற்ற வேண்டும்.

Leave a Reply