பெண் பயணியுடன் தகராறு. ஆற்றில் குதித்த கண்டக்டர் நிலை என்ன?
சில்லறை பிரச்சனை காரணமாக பெண் பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்டக்டர் திடீரென தற்கொலை முயற்சியாக ஆற்றில் குதித்ததால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்டக்டர் ஆற்றில் குதித்து பலமணி நேரம் ஆகிவிட்ட நிலையில் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள குருபூரைச் சேர்ந்த 42 வயது என்பவர் தேவதாஸ் ஷெட்டி மங்களூரு – சுப்ரமண்யா இடையே இயக்கப்படும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மங்களூருவில் இருந்து சுப்ரமண்யா நோக்கி பேருந்து சென்றது. அலங்கார் அருகே ஏறிய பெண் பயணி ஒருவருக்கு பயணச்சீட்டு வழங்கிய போது, மீதி சில்லறையை பின்னர் தருவதாகக் கூறியுள்ளார்.
ராமகுஞ்சாவில் அப்பெண் இறங்கும் போது நடத்துநர் தேவதாஸிடம், தான் ரூ.500 கொடுத்ததாகவும், மீதி சில்லறையை தருமாறும் கேட்டுள்ளார். அதற்கு தேவதாஸ், ‘நீங்கள் 500 ரூபாய் தரவில்லை. 100 ரூபாய் தான் கொடுத்தீர்கள்’ எனக் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் பேருந்து, ராமகுஞ்சா காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீஸார் இருவரையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பெண் பயணி, உடனடியாக தனது சகோதரர்களை அழைத்து முறையிட்டுள்ளார். பெண் பயணியின் சகோதரர்கள் நடத்துநரிடம் இருந்து ரூ.500 வாங்கிக்கொண்டு, அவரை தாக்கவும் முயற்சித்துள்ளனர். இதனால் அவமானத்தில் குன்றிப்போன கண்டக்டர், ‘சில்லறை பிரச்சினையால் எனது மானம் போய் விட்டது. இனி வாழ விரும்பவில்லை’ என்று குறிப்பு எழுதி தனது கண்டக்டர் பையில் வைத்துவிட்டு திடீரென ஓடும் பேருந்தில் இருந்து ஆற்றில் குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் பயணிகள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும், தீயணைப்பு படையினரும் நடத்துநர் தேவதாஸ் ஷெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.