கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் அணுமின் நிலையத்தின் அருகே இடிந்தகரை என்ற மீனவ கிராமம் உள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டில் கடலில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் வீடுகளை இழந்தவர்களுக்கு, சுமார் 450 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுப்பு வீடுகள் சுனாமி காலனி என்று அழைக்கப்படுகிறது.

சுனாமி காலனிக்கும், அணுமின் நிலைய வளாக சுற்றுச்சுவருக்கும் இடையே ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் இடிந்தகரை கிராமத்தில் நடந்து வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் இடிந்தகரை சுனாமி காலனியில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. கூடங்குளம் சுற்றுவட்டார பகுதி வரை இந்த சத்தம் கேட்டது.

குண்டு வெடித்ததால் பதற்றம் அடைந்த இடிந்தகரை கிராம மக்கள், சுனாமி காலனியை நோக்கி ஓடினார்கள். சுனாமி காலனியில் உள்ள 319 வது வீட்டில் அந்த குண்டு வெடித்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் அந்த வீடு முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி கிடந்தது. அருகே இருக்கும் மேலும் 2 வீடுகளும் இடிந்தன. எங்கும் புகைமண்டலமாக இருந்தது.

இரவு நேரம் என்பதால் உடனடியாக மீட்பு பணிகள் எதையும் ஊர் மக்களால் மேற்கொள்ள முடியவில்லை.

தீயணைப்பு மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டு வெடித்த வீட்டுக்குள் நுழைந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்த சிரமம் ஏற்பட்டது. அந்த வீட்டுக்குள் வெடிக்காத பல நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை தீயணைப்பு படை வீரர்கள் அறிந்தனர்.

வெடிகுண்டு வெடித்த வீட்டில் இருந்து தலை, கால்கள் இல்லாமல் ஒருவரது உடல் மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஒரு பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது. வீட்டிற்கு எதிரே உள்ள 329 வீடும் இடிந்து கிடந்தது. அந்த வீட்டில் இருந்த பிரமிளா என்ற பெண்ணை காணவில்லை.

எனவே அவரது செல்போன் எண்ணுக்கு போன் செய்தார்கள். அப்போது இடிபாடுகளுக்கு உள்ளே இருந்து செல்போன் ஒலித்தது. அதன் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்ட போது பிரமிளாவும் பிணமாகி கிடந்தது தெரியவந்தது. அவரது உடலும் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, 319 வது வீட்டின் அருகே 2 சிறுமிகள் விளையாடிக்கொண்டு இருந்ததாக சிலர் தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த சிறுமிகள் 2 பேரையும் காணவில்லை. எனவே அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

2 சிறுமிகளின் கதி என்னவென்று அறிய இடிபாடுகளுக்குள் தேடினார்கள். வெடிகுண்டு வெடித்ததில் அந்த 2 சிறுமிகளும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களது உடல்களும் மீட்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் அந்த சிறுமிகளின் தாயார் ரோஸ் என்பவரும், யாகப்பன் என்பவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், செல்லும் வழியில் யாகப்பன் பலியானார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரோசும் உயிரிழந்தார்.

எனவே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் வெடிக்காமல் இருக்கும் வெடிகுண்டுகளை செயல் இழக்கவைக்க வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

குண்டு வெடித்த வீட்டின் அருகே உள்ள வீடுகளைச் சேர்ந்த மேலும் சிலரை காணவில்லை. எனவே சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சட்ட விரோதமாக சிலர் வெடிகுண்டு தயாரித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் கூடங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply