கூடங்குளத்தின் முதல் உலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு. புதின், மோடி, ஜெயலலிதா பங்கேற்பு

கூடங்குளத்தின் முதல் உலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு. புதின், மோடி, ஜெயலலிதா பங்கேற்பு

koodankulam nuclear power plant issuesகூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகளில் முதல் உலையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி, மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இணைந்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளனர். இந்த நிகழ்வு மாஸ்கோ, புதுடெல்லி, சென்னை, கூடங்குளம் அணுமின் நிலையம் என 4 இடங்களில் இருந்து நேரடி ஒளிபரப்பாகிறது.

கூடங்குளத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் இந்திய அணுமின் சக்தி கழகத் தலைவர் எஸ்.கே.சர்மா, அணுஉலை வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் மற்றும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 10 ஆயிரத்து 700 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முதல் உலை வெற்றிகரமாக இயங்கி வருவதை அடுத்து இரண்டாவது உலையிலும் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

முதல் உலையில் இருந்து உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 562.50 மெகாவாட் மின்சாரமும், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு முறையே 221 மற்றும் 122 மெகாவாட் மின்சாரமும், புதுவை மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு 33.50 மற்றும் 50 மெகாவாட் மின்சாரமும் வழங்கப்படுகின்றன.

Leave a Reply