பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி உற்சவம் திரளான பக்தர்கள் வழிபட்டனர்

Srinivasa_Perumal_idols_with_flowers

சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று கூடாரவல்லி உற்சவம் நடைபெற்றது. இதில் பெருமாள், தன்னுடைய பக்தையான ஆண்டாளுடன் சேர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

கூடாரவல்லி உற்சவம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்தமாதமாகும். இந்த மாதத்தில்தான் அதிகாலையில் பெருமாள் கோவில்களில் நடை திறக்கப்பட்டு தினமும் ஆண்டாள் பாசுரம் பாடப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த மாதத்தில்தான் பெருமாளை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டாள் கடும் விரதம் இருந்து மனம் உருக பெருமாளிடம் பக்தி செலுத்தினார். அவரின் உண்மையான ஆழ்ந்த பக்தியை ஏற்றுக்கொண்ட பெருமாள் மார்கழி மாதம் 27-வது நாள் தன்னுடைய பக்தையான ஆண்டாளை தன்னோடு சேர்த்துக்கொண்டார். இந்த நாள்தான் கூடாரவல்லி உற்சவமாக ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும் நடைபெறுகிறது.

இந்த உற்சவத்தின்போது திருமணமாகாத கன்னிப் பெண்களும், மணமாகாத இளைஞர்களும் தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு, பூ, ஆகிய பூஜை பொருட்களுடன் இளைஞர்கள் வேட்டி சட்டையும், கன்னிப்பெண்கள் புடவையும், கண்ணாடி வளையல்கள் வைத்தும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி பூஜையில் வைக்கப்பட்ட வேட்டி, சட்டை, புடவையை தாங்கள் அணிந்தால் அவர்களுக்கு திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

கோட்டை பெருமாள் கோவில்

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று கூடாரவல்லி உற்சவத்தையொட்டி அதிகாலையில் ஆண்டாள் பாடிய பாசுரத்தில் 27-ம் பாடல் பாடப்பெற்று அழகிரிநாத பெருமாளுக்கும், சுந்தரவல்லி தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அழகிரிநாதர்-சுந்தரவல்லி தாயார் ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

மேலும் ஆண்டாள், துர்கையம்மன் போன்ற சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், தங்கக்கவச அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆண்டாளின் பக்தியை மெச்சிய பெருமாள், பக்தையான ஆண்டாளை தன்னுடன் சேர்த்துக்கொண்டதை நினைவு கூரும் வகையில் மூலவர் அழகிரிநாத பெருமாள் முன்பு ஆண்டாள், உற்சவர் மூர்த்தி பெருமாளுடன் சேர்த்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாலை மாற்றும் வைபவம்

இந்த பூஜையின்போது பெருமாள் மாலை ஆண்டாளுக்கும், ஆண்டாள் மாலை பெருமாளுக்கும் சாற்றப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து திருப்பாவை பாடல் பாடப்பட்டு கூடாரவல்லி நிறைவு செய்யப்பட்டது.

கோட்டை பெருமாள் கோவிலில் பூஜைகளை, சுதர்சன பட்டாச்சாரியார் முன்னின்று நடத்தினார்.இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளையும், ஆண்டாளையும் தரிசனம் செய்து வழிபட்டனர்.

பெரமனூர் வெங்கடேச பெருமாள்

சேலம் பெரமனூரில் அமைந்துள்ள வெங்கடேசபெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில் தினமும் அதிகாலை 5 மணி முதல் திருப்பாவை நிகழ்ச்சி நடந்து வந்தது. அதையொட்டி நேற்று மார்கழி மாதம் 27-ந் தேதி ஆண்டாளுக்கு கூடாரவல்லி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதையொட்டி அதிகாலை வெங்கடேச பெருமாள் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பெண் பக்தர்கள் புதிய புடவை, பழங்களுடன் சீர் வரிசை எடுத்து வந்து சாமியை வழிபட்டார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி பட்டாச்சாரியார்கள் ரவி, ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

இதேபோல் சேலம் பட்டைக்கோவில், 2-வது அக்ரகாரம் பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சின்னதிருப்பதி பெருமாள் கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் கூடாரவல்லி பூஜைகள் நடைபெற்றன.

Leave a Reply