கூரத்தாழ்வான் அவதார திருநக்ஷத்திரம் – தை ஹஸ்தம். ( 29.01.2016 )

12650908_1057648134286366_213296566355290577_n

பொதுவாக ஆச்சாரியர்களையும், பல வைஷ்ணவ முன்னோடிகளையும் குறிப்பிடும் போது , அவர்களை மிக மரியாதையுடன் “ ர் “ என்று வார்த்தை முடியும்படி அழைப்பார்கள். ஆனால் கூரத்தாழ்வானை , கூரத்தாழ்வார் என்று அழைக்காமல், கூரத்தாழ்வான் என்று அழைப்பதற்கு காரணம், இவரின் திருத் தகப்பனாரின் திருப்பெயர் அனந்தன் என்னும் கூரத்தாழ்வார் என்பதாகும். அதனால் இவரை கூரத்தாழ்வான் என்று அழைப்பர். இவரின் தாயாரின் திருப்பெயர் ஸ்ரீ.பெருந்தேவி நாயகி ஆகும்.

1010 ஆம் ஆண்டு, ஸௌம்ய வருஷம் , தை மாதம், ஹஸ்த நக்ஷத்திரத்திலே அவதரித்தவர். இவருக்கு முதலில் இடப்பட் ட திருநாமம் “ ஸ்ரீவத்ஸசிஹ்நர் “ . எப்படி ஸ்வாமி எம்பெருமானார் திருமார்பிலே ஒரு “மறு ( மச்சம்)“ இருந்ததோ, அதைப் போன்றே கூரத்தாழ்வானுக்கும், திருமார்பிலே ஒரு மறு இருந்தது. எனவே திருமறுமார்பன் என்னும் பொருள்படியான திருநாமமே , ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்பதாகும்.
காஞ்சிபுரத்திற்கு அருகிலே உள்ள கூரம் என்னும் கிராமத்தில் அவதரித்த இவர் கூரத்தாழ்வான் என்று அழைக்கப்பெற்றதற்குக் காரணம், இவர் பகவத் விஷயங்களில், அதுவும் எம்பெருமானின் கல்யாண குணங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததினால் , அவர் ஆழ்வான் என்ற பெயருடன் , அவரின் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, கூர்த்தாழ்வான் என்று அழைக்கப்பட்டார்.

ஸ்ரீ.வைஷ்ணவ சம்பிரதாயத்திலே, கூரத்தாழ்வானுக்கு ஒரு சிறப்பு மிக்க தனியிடம் உண்டு. காரணம் ஸ்வாமி எம்பெருமானாரின் மிக அத்யந்த ஸிஷ்யர்கள் இருவர். ஒருவர் ஸ்ரீ.ராமாநுஜரின் , த்ருதண்டமாக கொள்ளப்பட்ட ஸ்ரீ.முதலியாண்டான். மற்றொருவர் ஸ்ரீ.கூரத்தாழ்வான். இவரை எம்பெருமானாரின் , பவித்திரமாக பாவிப்பர். மேலும் ஸ்ரீ.ராமாநுஜர், ஸந்யாசம் பாவிக்கும் பொழுது , அவர் , “ தாம் ஸன்யாசி ஆவதற்கு எல்லாவற்றையும் துறந்தாலும், , முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் மட்டும் துறக்க முடியாது என்று சொல்லியே துறவறத்தை மேற்கொண்டார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளமுடியும் கூரத்தாழ்வானுக்கு எவ்வளவு சிறப்பு உண்டு என்று.

மேலும் நம் பெரியோர்கள் கூறிய ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். திரேதா யுகத்திலே ஸ்ரீ.ராமனாக எம்பெருமான் அவதாரம் செய்த பொழுது, ஆதிசேஷன், அவரது தம்பி ஸ்ரீ.லக்ஷ்மணனாக அவதாரம் செய்து எம்பெருமானுக்கு, பணிவிடைகள் செய்தார். அப்பொழுது, ஸ்ரீ.ராமனுக்கு, தொண்டு செய்ய விழைந்து 14 ஆண்டுகள் , தன் மனைவியைப் பிரிந்து இருந்ததுடன், உண்ணாமலும், உறங்காமலும் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார். தனக்கு இவ்வாறு , தன்னை வருத்தி, பணிவிடைகள் செய்த ஆதிஸேஷனுக்கு அடுத்த அவதாரத்திலே, தான் பணிவிடைகல் செய்ய வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார்.

12654232_1057648287619684_5765597752238843504_n

அடுத்த யுகமான த்வாபரயுகத்திலே, தான் பகவான் கிருஷ்ணனாகவும், ஆதிஸேஷன் பலராமராகவும் அவதரித்த பொழுது, தம்பியான க்ருஷ்ணன், அண்ணனான பலராமனுக்கு பல பணிவிடைகள் செய்தார். ஆனாலும் அதில் திருப்தி அடையாத எம்பெருமான், கலி யுகத்திலே , தான், கூரத்தாழ்வானாகவும், ஆதிசேஷன் ஸ்ரீ.ராமாநுஜராக அவதரித்ததாகவும் பெரியோர்கள் கூறுவர். அப்படி எம்பெருமான் கூரத்தாழ்வானாக, கலியுகத்திலே பிறந்து, தன் எண்ணம் முழுவதும் பூர்த்தியடையும்படியாக , ஸ்ரீ.லக்ஷ்மணனாக த்ரேதாயுகத்திலே தனக்கு செய்த பணிவிடைகளை விட கூடுதலாக, ஸ்வாமி.எம்பெருமானாராக அவதரித்த ஆதிசேஷனுக்கு பணிவிடைகள் செய்தார் என்பது சரித்திரம்.

ஸ்வாமி.எம்பெருமானார் , ஒரு சமயம் திருவாய்மொழியின் அர்த்தத்தை ஸ்ரீ.கூரத்தாழ்வானிடம் கேட்க விரும்பினார். ஆனால் , கூரத்தாழ்வானோ, தன் ஆச்சாரியரான எம்பெருமானாருக்கு, தான் அடிமைத் தொழில் செய்வதையே பாக்கியமாகக் கொண்டவர் என்பதினால், தான் ஆசிரியராக இருந்து, எம்பெருமானாருக்கு, திருவாய்மொழியின் , வ்யாக்யானத்தை உரைக்க மாட்டார் என்று கருதி, வெரொறு வகையில் அவரிடம், திருவாய்மொழியின் அர்த்தத்தை கேட்க விரும்பி, அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது. அதன்படி, முதலியாண்டான் உட்பட வேறு பலருக்கு, கூரத்தாழ்வான், திருவாய்மொழியின், அர்த்தத்தை சொல்ல, அவர்கள் அதனை எம்பெருமானாரிடம் மீண்டும் சொல்லும் வகையில் வழி மேற்கொள்ளப்பட்டது.

திருவாய்மொழியின் முதல் பாசுரமான “ உயர்வற உயர் நலம் உடையவன் “ பாசுரத்தின் அர்த்தத்தை விளக்கிக் கொண்டிருக்கும் போது, கூரத்தாழ்வான் , அப்படியே மயங்கி விட்டார். இப்படி அவர் மயங்கி விழுந்ததற்கு என்ன காரணம்? பிற மதவாதிகள் எல்லாம், எம்பெருமானாகிய ஸ்ரீமந்.நாராயணனுக்கு, குணம் என்பதே கிடையாது, அது நிற்குணம் என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஸ்வாமி.நம்மாழ்வார் “ உயர்வற உயர்நலம் உடையவன் “ என்று திருமாலின் குணங்களை எப்படி அழகாக விளக்கியுள்ளார் என்று , அப்படியே அந்த அர்த்தத்தில் ஆழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விட்டார். கூரத்தாழ்வான் மயங்கி விழுந்துவிட்டதை எம்பெருமானாரிடம் மற்றவர்கள் வந்து சொல்ல, அவர், “ இது போல்தான் ஸ்வாமி.நம்மாழ்வாரும், அவரின் திருவாய்மொழியின் முதல் பத்தின், மூன்றாம் திருமொழியின், “ பத்துடை அடியவர்க்கு எளியவன் “ என்று தொடங்கும் முதல் பாசுரத்தின் கடைசி வரியான “ எத்திரம் உரலினோடு , இணைதிருந்து ஏங்கிய எளிவே “ என்று அருளிசெய்து கொண்டிருக்கும் பொழுது மயங்கி , ஒரு ஆறு மாதம் அதே நிலையிலேயே இருந்தார். இதனை பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லை , ஆனால் அதே நம்மாழ்வாரைப் போல், இப்பொழுது மயங்கி இருக்கும் கூரத்தாழ்வானை பார்க்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைத்ததே “என்று குரல் வலுவிழந்த நிலையில் கூறினாராம்.

காஞ்சி.ஸ்ரீ.வரதராஜப் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கூரத்தாழ்வான். காஞ்சியில், வரதராஜப் பெருமாளுக்கு நடக்கும் உற்சவங்களுக்கு வரும் பக்தர்களுக்கு, தான், ஆண்டு கொண்டிருக்கும் , கூரத்தில், தினமும் ததியாராதனம் செய்து அடியார்களை குளிர வைப்பார்.ஸ்ரீ.வரதராஜப் பெருமாளிடம் கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக பெரும் செல்வந்தரான கூரத்தாழ்வான், தான் எந்த நிலையிலும் எம்பெருமானின் சொத்துகளை விட , மிக அதிக சொத்துக்கள் உள்ளவன் என்ற நிலை இருக்கக் கூடாது என்று எண்ணி, தன் சொத்துக்கள் அத்தனையையும் மற்றவர்களுக்குப் பிரித்து கொடுத்துவிட்டு, ஒரு சிறிதளவே கைங்ககர்யங்கள் செய்வதற்காக வைத்துக் கொண்டார்.

மேலும் எந்த நிலையிலும், ஸ்வாமி.எம்பெருமானாரை பிரியாத நிலையில் தான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், எம்பெருமானார் , காஞ்சியை விட்டு நம்பெருமாள் திரு உள்ளப்படி, அரங்கன் ஸேவை செய்ய சென்ற பொழுது அவருடனே, இவரும் திருவரங்கம் சென்று , நம்பெருமாளுக்கு , எம்பெருமானாருடன் சேர்ந்து கைங்கர்யங்கள் செய்து கொண்டிருந்தார். இப்படி ஒருமுறை காஞ்சி நகரம் வந்து விட்டு, தான் வைத்துக்கொண்டிருந்த மீதமுள்ள சொத்துக்களையும் , கூரத்தில் உள்ளவர்களுக்கே கொடுத்துவிட்டு, வெறும் கையுடனே , தனது மனைவி ஸ்ரீ.ஆண்டாளுடன் மீண்டும் திருவரங்கம் செல்லலானார். அப்பொழுது மதுராந்தகத்திற்கு அருகில் ஒரு காட்டு வழியில் , இரவில் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஆண்டாள் அம்மையார் சற்று பயத்துடனே, ஆழ்வானுடன் சென்று கொண்டிருந்தார். இதனைக் கண்ட ஆழ்வான் “ மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும் . நாம் தான் ஒன்றுமே எடுத்துக் கொண்டு வரவில்லையே, பின் ஏன் பயப்படுகிறாய் “ என்று கேட்டார். ஆண்டாளும் அவரிடம் , தினமும் ஆழ்வார் பால் அருந்துவதற்கு அவர் பயன்படுத்தும் பொன் வட்டிலை எடுத்து வந்திருப்பதாகக் கூற, உடனே ஆழ்வான் அதனை வாங்கி , பக்கத்தில் இருந்த ஒரு புதரில் எறிந்துவிட்டு , இனி “நமக்கு வழியில் பயமில்லை “ என்று கூறி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். இதனை அவரின் வாழி திருநாமத்தில் “ பொன் வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே “ என்று போற்றப்படுகிறார்.

ஸ்வாமி.எம்பெருமானார், திருவரங்கத்து திருக்கோயில் பணிகளை சீர்திருத்த எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அப்பொழுது , திருக்கோயில் முழுவதும் , திருவரங்கதமுதனார் கட்டுப்பாட்டில் இருந்தது. அவ்வாறு , அவரின் கீழ் இருந்தால் திருக்கோயிலின் பணிகளை சீர் திருத்த முடியாது என்று முடிவெடுத்து , அப்பணிகளை திருவரங்கதமுதனாரிடம் இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தார். அச்சமயம் திருவரங்கத்தமுதனாரின் தாயார் பரமபதித்து விட்டிருந்தார். அவரின் கார்யங்களின் போது, பதினோறாம் நாள், ஏகாஹம் அன்று, ஸ்வாமியாக இருக்க , ஒருவரை நியமிக்க எம்பெருமானாரிடம் , அமுதனார் விண்ணப்பிக்க , எம்பெருமானாரும், கூரத்தாழ்வானை ஸ்வாமியாய் இருக்க நியமித்தார். எம்பெருமானாரின் திரு உள்ளத்தை புரிந்து கொண்ட கூரத்தாழ்வானும், ஸ்வாமியாய் இருக்க சம்மதித்து , ஏகாஹம் பூர்த்தியானவுடன், அமுதனார் , அவரிடம் திருப்த்தி தானே என்று கேட்க, எம்பெருமானார் இவரிடம் சொன்னபடி “ இல்லை “ என்று சொல்ல, வேறு என்ன வேண்டும் என்று கேட்க, கூரத்தாழ்வானும், திருவரங்கத்து திருக்கோயிலின் , சாவியை கொடுத்தால் , தான் திருப்தியடைவேன் என்று கூற, அமுதனாரும் அதனை உடனே அவரிடம் கொடுத்தார். இதன் காரணமாக திருக்கோயிலில், பல நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, திருக்கோயில் பொலிவுடன் விளங்குகிறது. எம்பெருமானாருக்கு இதற்கு துணையாக இருந்தவர் கூரத்தாழ்வான்.

எம்பெருமானார் பிரம்மஸூத்திரத்திற்கு , விசிஷ்டாத்வைத முறைப்படி ஸ்ரீ.பாஷ்யம் ஸாதிக்க விரும்பி, அதன் மூல கிருந்தமான நூல் , காஷ்மீரத்திலே இருப்பதை அறிந்து , கூரத்தாழ்வானுடன் அங்கு சென்றார். அந்த மூல நூலை, கூரத்தாழ்வான் படித்து, மனதிலே இருத்திக் கொண்டார். அப்புத்தகத்தினை எம்பெருமானாரும் படிக்க விரும்பி, அதனை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவரை விரோதியாக பாவித்த சிலர் , அப்புத்தகத்தினை அவரிடம் இருந்து , பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த இராமாநுஜரிடம், கூரத்தாழ்வான், “ புத்தகம் பிடுங்கப்பட்டுவிட்டதே என்று கவலை கொள்ள வேண்டாம் என்றும், தாம் அப்புத்தகத்தினை முழுவதும் படித்துவிட்டதாகவும் கூறினார். மேலும் எம்பெருமானார் ஸ்ரீ.பாஷ்ய விளக்க உரை கூறும் பொழுது, அதனை எழுத்தில் கொண்டுவரும் தான், அதில் ஏதாவது தவறிருந்தால் எழுவதை நிறுத்துவதாகவும் கூறினார். அதனை ஒப்புக்கொண்ட எம்பெருமானாரும், ஸ்ரீபாஷ்யத்திற்கு விளக்கம் கூற, அதனை கூரத்தாழ்வானும் அப்படியே எழுதிக் கொண்டு வந்தார். ஒரு சமயம் எம்பெருமானார் உரைத்த ஒரு பொருளில் , தவறிருக்க கூரத்தாழ்வானும் எழுதுவதை நிறுத்திவிட்டார். இதனை உணர்ந்து கொண்ட எம்பெருமானார், அநத விளக்கத்தினை சரிசெய்து மீண்டும் கூற, அப்படியே , இவரும் அதனை எழுத்திலிட்டார். இப்படியாக ஸ்ரீ.பாஷ்யம் எழுத்துவடிவில் நிறைவடைந்தது.

இராமாநுசரின் காலத்தில், சோழ தேசத்தை, குலோத்துங்க சோழன் என்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் தீவிர சைவ பக்தன். வைணவத்தை அவன், அறவே வெறுப்பவன். அதன் காரணமாக, சைவத்தை விட மேலான மதம் எதுவும் இல்லை என்றும், சிவனுக்கு மேற்பட்ட தெய்வம் யாருமில்லை என்றும் எழுதி அதில் வித்வான்கள் எல்லோரும் கையெழுத்திட மிரட்டினான். சிலர் பயந்து கொண்டும், சிலர் பணத்திற்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டும் கையெழுத்திட்டனர். மேலும் சிலர் இதனை ஒப்புக்கொள்ளாமல், வேறு ராஜாக்கள் அரசாளும் பகுதிக்குச் சென்றுவிட்டனர். இதனைக் கண்ட கூரத்தாழ்வானின் , சிஷ்யனாக இருந்த நாலூரான் என்பவன் அரசனிடம் சென்று, மற்றவர்களை மிரட்டியும், வற்புருத்தியும் கையெழுத்து வாங்கினாலும், வைணவம் கீழானது ஆகிவிடாது. இந்த வைணவ மதத்திற்கு தலைவராக இருக்கும், இராமாநுசரை அழைத்து , அவரிடம் கையெழுத்து வாங்கினால், வைணவத்தை இல்லாமல் ஆக்கிவிடுவதோடல்லாமல், வைணவமே நம்மிடம் ஒப்புக்கொண்டதாகிவிடும் என்று கூறினான். இதனால், சேவகர்களை அனுப்பி, இராமாநுசரை அழைத்துவரப் பணித்தார். இதனைக் கேள்வியுற்ற கூரத்தாழ்வான், எம்பெருமானார் அரசனிடம் சென்றால், அவருக்கு தீங்கு ஏற்படும் என்று கருதி, அவரே, இராமாநுசர் வேடத்தில் அரசனை சந்திக்க விரும்பி, தானே எம்பெருமானாரின் காவி உடையை உடுத்திக்கொண்டு. த்ரிதண்டத்தையும் எடுத்துக் கொண்டு சென்றார். அவ்வாறு காவி உடை உடுத்திக் கொண்டு செல்வது சரியான முறையாகாது என்றாலும், குருவை காப்பாற்ற வேண்டியது , சிஷ்யனின் கடமை என்ற காரணத்தினால் அவ்வாறு சென்றார். அரசனிடம் சென்ற பொழுது , அவனிடம் வாதிட்டார். அச்சமயம், அரசன் கூரத்தாழ்வானின் கண்களை பிடுங்க அவன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டான். ஆனால் ஆழ்வானோ அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் தன் கண்களை தானே பிடுங்கிக் கொண்டார். இராமாநுசரும் அங்கிருந்து வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, சிஷ்யர்களின் விருப்பப்படி, திருநாராயணபுரம் சென்றுவிட்டார். இதன் காரணமாகத்தான் இன்றளவும் எம்பெருமானாரின் அவதார உற்சவத்தின் ஆறாம் நாளன்று, பல திருக்கோயில்களில், எம்பெருமானாருக்கு வெள்ளை சாற்றுப்படி சாற்றுவது வழக்கமாக உள்ளது.

முக்குறும்பு எனக் கூறப்படும், கல்வி செருக்கு என்கிற வித்யா மதம்( நான் அதிகம் படித்தவன்,என்னை விட படிப்பில் சிறந்தவன் இல்லை என்கிற எண்ணம்) குலச் செருக்கு என்னும் ஆபிஜாத்ய மதம் ( நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்கிற இறுமாப்பு ), செல்வச் செருக்கு என்னும் தன மதம் ( நான் தான் அதிகம் பணம், செல்வம் உடையவன் என்ற எண்ணம் ) என்ற மூன்றையும் அழித்தவராதலால் , இவருக்கு முக்குறும்பு அழித்தவர் என்று பெயர். இவரின்
வாழி திருநாமத்தில் “ மருள் விரிக்கும் முக்குறும்பை மாற்ற வந்தோன் வாழியே “ என்றும் போற்றப்படுகின்றார்.

கூரத்தாழ்வானின் மற்றொரு சிறப்பு. எம்பெருமானாருக்கு முன்பு இருந்த ஆச்சார்யர்களுக்கு,வழி வழி வந்த ஆச்சாரியர்களின் திருமுடி சம்பந்தத்தால், அவர்களுக்கு மோக்ஷம் கிடைத்தது. ஆனால் எம்பெருமானாருக்கோ, அவரின் சிஷ்யரான கூரத்தாழ்வானின் ஸம்பந்தத்தால் மோக்ஷம் கிடைத்தது என்பது கூரத்தாழ்வானின் சிறப்பை பெருமையுடன் பறைசாற்றுவதாக உள்ளது.
இப்படியாக சிறப்புடன் வாழ்ந்த கூரத்தாழ்வான் , பரமபதிக்க நினைத்தார். இதற்குக் காரணம் தான் திருநாடு எழுந்தருளுவதற்கு முன், எம்பெருமானார் பரமபதித்துவிட்டால், தான் திருநாடு எழுந்தருளும்போது, தன்னை அங்கு, எம்பெருமானார் வரவேற்பார் என்றும், ஒரு ஆசாரியன் தன் சிஷ்யனை அவ்வாறு முன்னின்று வரவேற்பது சரியான முறையில்லை என்பதனால் , தான் எம்பெருமானாருக்கு முன்பே பரமபதிக்க விழைந்தார். அதனால் நேராக ஸ்ரீ.நம்பெருமாளிடம் சென்று, ஒரு ஸ்லோகத்தை மிகவும் உருக்கமாக விண்ணப்பித்தார். இதனைக் கேட்டு ஆனந்தமுற்ற நம்பெருமாள், கூரத்தாழ்வானிடம் , அவருக்கு வேண்டிய வரத்தை கேட்குமாறும், அதனை நிச்சயம் தான் வழங்குவதாகவும் கூறினார். ஆழ்வான் , தான் திருநாட்டுக்கு எழுந்தருள விரும்புவதாகக் கூறி, தனக்கு அந்த பாக்கியத்தை அளிக்குமாறு வேண்டினார். ஆனால் நம்பெருமாளோ, அவரை தன்னிடம் இருந்து அனுப்ப மனமில்லாமல் வேறு ஏதாவது வரம் கேளும் என்று சொன்னார். ஆனால் ஆழ்வான் உறுதியாக , எம்பெருமான் வாக்களித்தபடி தனக்கு திருநாடு அலங்கரிக்க அருள வேண்டும் என்று வேண்ட, நம்பெருமாளும் வேறு வழியின்றி, தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதாகக் கூறி, அவர் திருநாடு எழுந்தருள அனுமதி கொடுத்தார். பின் ஆழ்வான், மனைவியிடம் “ தான் , திருநாடு எழுந்தருள நம்பெருமாளிடம் அனுமதி பெற்று வந்திருப்பதாகக் கூறினார். ஆண்டாளும், எம்பெருமானார் தொடர்பு உள்ளவர்களுக்கு நிச்சயம் மோக்ஷம் கிடைக்கும் என்பது , அவர் பரமபதிபதின் வாயிலாக மற்றாவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும், நல்லபடியாக பரமபதம் செல்லுமாறு கூறி, அவரை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு விடை கொடுத்தார். பிறகு ஆழ்வானும் , தன் குமாரர்களான, பராசர பட்டரையும், வேத வியாச பட்டரையும் அழைத்து , தாங்கள், கூரத்தாழ்வானின் பிள்ளைகள் என்ற இறுமாப்புடனோ அல்லது நம்பெருமாளால் வளர்க்கப்பெற்றவர்கள் என்ற அகந்தையுடனோ இருக்கக் கூடாது என்று சொல்லி, எப்பொழுதும் ஸ்வாமி.எம்பெருமானாரின் திருவடி தொடர்புடனே இருக்க வேண்டும் என்றும் , அப்படி இருந்தால்தான் அவர்களுக்கும் மோக்ஷப்ராப்த்தி கிடைக்கும் என்று கூறி அவர்களிடமும் விடைபெற்று , திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

இப்படியாக ஸ்ரீ.கூரத்தாழ்வானைப் பற்றி மேலே குறிப்பிட்ட சரித்திர சம்பவங்கள் மட்டுமல்லாது, மேலும் பலப் பல சரித்திர நிகழ்வுகள் உள்ளன. அவற்றைக் குறிப்பிட வேண்டுமானால் இந்த முக நூலே போதாது என்ற காரணத்தினால் அடியேன் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கூரத்தாழ்வான் , திருமாலிருஞ்சோலை திவ்ய தேஸ யாத்திரை செல்லும் பொழுது மூன்று ஸ்தவங்கள் அருளிச் செய்தார். மேலும் எம்பெருமானாரின் ஆக்ஞ்சைப்படி “ வரதராஜஸ்தவம் “ அருளினார். பின் ஸ்ரீஸ்தவம் என்ற நூலையும் அருளினார். ஆழ்வாரின் இந்த பஞ்சஸ்தவங்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை. இவை தவிர கூரேச விஜயம் உட்பட் இன்னும் சில நூல்களை இயற்றியுள்ளார்.

கூரத்தாழ்வானின் திருக்குமாரர்கள் ஸ்ரீ.பராசர பட்டர், ஸ்ரீ.வேத வ்யாச பட்டர் ஆவர்கள். இருவருமே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் தழைத்தோங்க காரணமாயிருந்தனர்.

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த “இராமநுச நூற்றந்தாதியில் “ , கூரத்தாழ்வானின் சிறப்பை விளிக்கும் விதமாக, ஏழாம் பாசுரத்தில்,
“ மொழியைக் கடக்கும் பெரும் புகழான் * வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் * பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடியல்லால் வழியைக் கடத்தல் * எனக்கினியாதும் வருத்தமன்றே “ குறிப்பிட்டுள்ளார்.

நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை மேன்மையுறச் செய்தது மட்டுமின்றி, ஸ்வாமி.எம்பெருமானாருக்கு, பவித்திரமாக விளங்கி, அவருக்கு தொண்டு செய்து, எம்பெருமானார் திருவடி சம்பந்தம் மட்டுமின்றி, அவர் தொடர்புள்ளவர்களுக்கும் மோக்ஷம், நிச்சயமே என்று நிரூபித்த ஸ்ரீ.கூரத்தாழ்வானின் அவதார ஸ்தலமான் கூரம் சென்று, அங்குள்ள திருக்கோயிலில் அவரை ஸேவித்து வழிபட்டு பேரினபமடைய அடியார்கள் அனைவரையும் ப்ரார்த்திக்கிறேன்.

கூரம் நகரம், சென்னையிலிருந்து, பெங்களூர் செல்லும் சாலையில், காஞ்சிபுரம் செல்லும் சாலைக்கு , எதிர்புறத்தில் வலது பக்கம் உள்ள சாலையில் சென்றால் சுமார் 15 நிமிடங்களில் எளிதில் அடையலாம். காஞ்சிபுரம் சாலைக்கு அருகில் வெள்ளை கதவு ( White Gate ) என்ற இடம் அருகில் சென்று, அங்குள்ளவர்களைக் கேட்டால், கூரம் செல்லும் வழியை கூறுவார்கள்.

பின் குறிப்பு : மேற்படி கூரத்தாழ்வானை பற்றி எழுதுவதற்கு அடியேனுக்கு வழக்கம் போல் குறிப்புக்கள் எடுத்துக் கொடுத்த அடியேன் மனைவிக்கும், மேலும் குறிப்புக்கள் எடுக்க உதவிய நூல்களான, “ ஆச்சார்யர்கள் வைபவ சுருக்கம் “ அருளிய நாங்குநேரி.ஸ்ரீ.அப்பாழ்வார் ஸ்வாமிக்கும், “ ஸ்ரீ.கூரத்தாழ்வான் வைபவம் “ என்ற நூலை வெளியிட்ட ஸ்ரீ.கூரத்தாழ்வான் சாரிடபிள் ட்ரஸ்ட், கூரம் அவர்களுக்கும் அடியேனின் நன்றி

Leave a Reply