உலக நிகழ்வுகளிலேயே மகாபாரதப்போர் மிகவும் வித்தியாசமானது. அண்ணன், தம்பி, மாமன் , மைத்துனன் , குரு , சிஷ்யன் என்று மிக நெருக்கமான, பிணைந்திருக்கவேண்டிய உறவுகள் ஒருவரை ஒருவர் போரிட்டு இறப்பதென்பது சாதாரணமான விஷயமல்லவே .
இந்த போர் நடைபெறும் இடம் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும் அல்லவா ? அப்படி ஒரு இடத்தை தேடிச் சொல்லுமாறு ஸ்ரீநாரத மகரிஷிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆணையிட்டார்.
எதிரில் இருப்பவன் என் தம்பி , என் அண்ணன், என் குரு என்ற எண்ணமே வரக்கூடாது போர் ஒன்றே அவர்களின் குறியாக இருக்க வேண்டும் அப்படி ஒரு இடம் எங்கிருந்தாலும் அதைச் சொல் என்று சொல்லி இருந்தார் ஸ்ரீகிருஷ்ணர் . பகவானின் கட்டளையை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ நாரதர் வானுலகம் முதல் கீழுலகம் வரை சென்று தேடினார் எங்கும் அப்படி ஒரு இடம் கிடைக்கவில்லை , மனம்தளராமல் பூலோகம் வந்த ஸ்ரீ நாரத மகரிஷி பல இடங்களில் அலைந்து திரிந்தார்.
ஒரு நாள் ஒரு கிராமத்தின் வழியே வந்தவர் ஒரு காட்சியைக்கண்டு நின்றார்.
அங்கே அவர்கண்ட காட்சி :
ஒரு விவசாயி தனது நிலத்தின் ஒரு பகுதிக்கு நீர் பாய்ச்சி முடிந்தவுடன் நிலத்தின் மறுபகுதிக்கு நீ போகவேண்டும் என்பதற்காக நீர் செல்லும் பாதையை அடைத்து மறு பகுதியை திறந்து விட முயற்சித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அந்த பகுதியில் இருந்த மண் நீரில் நன்றாக கலந்து விட்டபடியால் இறுக்கம் இல்லாமல் குழைந்து போயிருந்தது ,அதனால் நீர் போகும் பாதையை அடைக்க முடியவில்லை, நீரோ வேகமாக நீர் நிறைந்து விட்ட வயலுக்குள் போய்க்கொண்டிருந்தது.
இப்போது உடனே நீரின் வழியை அடைக்கவேண்டும் . இல்லாவிட்டால் நீர் நிறைந்து விடும் , அதனால் பயிர்கள் அழுகிவிடும் அபாயமுள்ளது
என்ன செய்வது ? நீரை அடைக்க என்ன வழி ? என்ன செய்யலாம் ? ஒரு பெரிய கல் கிடைத்தால் போதும் .
சுற்றிலும் பார்த்தான் அந்த விவசாயி . அருகில் சேற்றில் விளையாடிக்கொண்டிருந்த தனது ஒரே மகனைக் கண்டான் .
அவன் தலை அந்த நீரின் போகும் பாதையை அடைக்கும் அளவிற்கு சரியாக இருப்பதாக மனதில் தோன்றியது , உடனே அவனை அருகில் இழுத்து கீழே தள்ளி மண்வெட்டியால் ஒரே வெட்டு , துண்டாக விழுந்த தலையை எடுத்து இடைவெளியில் அடைத்தான் .
நீர் வயலுக்குள் போவது நின்றது , விவசாயியின் முகத்தில் மலர்ச்சி , இவ்வளவும் ஒரு நொடியில் முடிந்தது.
இதனை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீநாரத மகரிஷிக்கு பகீரென்றது .
இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா ?
தன் நோக்கம் நிறைவேற வேண்டும் , அதனால் என்ன பாதிப்பு வந்தாலும் சரி என்கிற எண்ணத்தினை ஊறச் செய்கின்றதோ இந்த இடம்.
அப்படியானால் இந்த இடம்தான் மகாபாரதப் போருக்கு உகந்த இடம் என்று எண்ணி ஸ்ரீ கிருஷ்ணரிடம் தெரிவித்தார் , அந்த இடமே மகாபாரதப் போர் நடத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டது.
அந்த இடத்தின் பெயர் குருக்ஷேத்ரம் ஆகும்.