சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்த தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்துமே போட்டியிடாததால், ஒரே ஒரு குதிரை மட்டும் ஓடும் குதிரைப்பந்தயம் போல ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறுவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் உள்ள குஷ்பு, கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்து வருகிறார்.
கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் அதே ஜூன் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, ஆரிய நாடு பகுதியில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
“ராகுல்காந்தி ஏழை விவசாயிகளுக்காகப் போராடி வருகிறார். அவர் மாநிலம் வாரியாக சென்று விவசாயிகளுக்காக நடைப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட்டு அணிந்துகொண்டு, விமானப்பயணம் செய்து வெளிநாடுகளில் சுற்றுகிறார். அங்கு ‘செல்பி’ எடுக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளை பாரதிய ஜனதா நிறைவேற்றவில்லை. பாரதிய ஜனதாவின் முக்கிய பொறுப்பாளர்கள் சர்ச்சையில் சிக்கி உள்ளனர். மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, பங்கஜா முண்டே போன்றவர்களை இன்னும் நீக்காதது ஏன்? பிரதமர் மோடி ஹிட்லர் போல ஆட்சி செய்கிறார். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துபோய் உள்ளனர்.
தமிழகத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இதனால் மந்திரிகள் அனைவரும் இந்த தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். ஜெயலலிதாவுக்கு ஓட்டு குறைந்தால் தங்கள் பதவி பறிபோய்விடும் என்று அமைச்சர்கள் பயத்துடன் உள்ளனர்” என்று கூறினார்.