திமுகவில் இருந்து விலகிய குஷ்பு பாரதிய ஜனதாவில் சேருவதற்குரிய ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
திமுகவில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நேற்று முன் தினம், திடீரென குஷ்பு திமுகவில் இருந்து விலகினார். அதன்பின்னர் எந்த கட்சியிலும் சேருவதில்லை என்று குஷ்பு தெரிவித்து வந்தாலும், அவரிடம் பாரதிய ஜனதாவின் முன்னணி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதே குஷ்பு பாரதிய ஜனதாவில் சேர முயற்சி செய்தார். ஆனால் அப்போது கருணாநிதி குஷ்புவை சமாதானப்படுத்தியதால், குஷ்பு தனது முடிவை மாற்றினார். தற்போது திமுக படுதோல்வி அடைந்து கட்சியே மீள முடியாத நிலையில் இருப்பதால் இனியும் திமுகவில் தொடர்வதால் எவ்வித பலனும் இல்லை என்று எண்ணி குஷ்பு கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
ஏற்கனவே குஷ்பு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கு ஆதரவாக தனது டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வந்தார். கல்வி அமைச்சர் இரானிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் குஷ்புவிடம் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் குஷ்பு டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொள்வார் என கூறப்படுகிறது. குஷ்பு பாரதிய ஜனதாவில் இணைந்தால் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த அவருக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் பதவி கொடுக்கப்படும் என பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.