இளங்கோவன் ஒத்துழைப்பை என்னால் மறக்க முடியாது. குஷ்பு பேட்டி

kushboo1சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்பு, கட்சியில் சேர்ந்த ஐந்தே மாதங்களில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செய்தி தொடர்பாளராக கட்சி தலைவர் சோனியா காந்தியால் நியமனம் செய்யப்பட்டார். இந்த பதவி தனக்கு கிடைக்க மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனக்கு அளித்த ஒத்துழைப்பை தன்னால் மறக்க முடியாது என்று கூறிய குஷ்பு திமுக தலைவர் கருணாநிதி மீது அன்பு, பாசம், மரியாதை இன்னமும் வைத்திருப்பதாக கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின், தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு குஷ்பு அளித்த பதில்களும் பின்வருமாறு:-

கேள்வி:- தமிழக காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அணி, சிதம்பரம் அணி என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட சிதம்பரம் சிவகங்கையில் தனியாக மாநாடு நடத்தியிருக்கிறார். இதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?

பதில்:- தமிழக காங்கிரஸ் ஒரே அணியாக தான் செயல்படுகிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் தெரிவித்து தான் சிவகங்கையில் மாநாட்டை ப.சிதம்பரம் நடத்தி இருக்கிறார். ப.சிதம்பரம் இல்லாமல் தமிழக காங்கிரஸ் இல்லை. ஆனால், காங்கிரஸ் இல்லாமல் யாருமே இல்லை.

கேள்வி:- குறுகிய காலத்தில், காங்கிரஸ் கட்சியில் எதன் அடிப்படையில் உங்களுக்கு பதவி தரப்பட்டிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்:- திறமை, உழைப்பு, கட்சியை முன்னெடுத்து கொண்டு செல்வார் என்று நினைத்து பார்த்து, சோனியாகாந்தி எனக்கு பதவி கொடுத்திருக்கிறார்.

கேள்வி:- காமராஜர் பெயரை சொல்லி தமிழகத்தில் காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியாது என்று கார்த்தி ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். நீங்கள் சொல்லுங்கள், தமிழகத்தில் காமராஜர் பெயர் இல்லாமல் காங்கிரசை முன்னெடுத்து செல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- காமராஜரையும், காங்கிரசையும் பிரிக்கவே முடியாது. காமராஜர் இல்லாமல் தமிழக காங்கிரசை பற்றி பேச முடியாது. காமராஜர், காங்கிரஸ் இரண்டுமே ஒன்று தான்.

கேள்வி:- தி.மு.க.வில் இத்தனை ஆண்டுகள் இருந்தீர்கள், உங்களுக்கு பதவி…

பதில்:- நான் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். எனவே காங்கிரஸ் கட்சி சம்பந்தமான கேள்வியே மட்டுமே கேளுங்கள். நான் எப்போதும் சொல்வது போல தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது மிகுந்த அன்பு, பாசம், மரியாதை வைத்திருக்கிறேன். இது என்றைக்கும் மாறாது.

கேள்வி:- தமிழகத்தில் காங்கிரசை விட பா.ஜ.க. எழுச்சி பெற்று வருவதாக கூறப்படுகிறதே?

பதில்:- என்ன? எழுச்சியா!. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவிலேயே தமிழக பா.ஜ.க.வின் எழுச்சியை பார்த்துவிட்டோம்.

சென்னை தாம்பரத்தை தாண்டினால் ‘தாமரை’யை (பா.ஜ.க. கட்சி சின்னம்) என்னவென்று மக்கள் கேட்கிறார்கள். இது தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் எழுச்சி.

கேள்வி:- நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. மத்திய அரசின் ஆட்சி பற்றி உங்களுடைய கருத்து?

பதில்:- இந்தியாவில் மதரீதியாக நடக்கும் தாக்குதலை பார்க்கும்போது மிகவும் கவலையாகவும், பயமாகவும் இருக்கிறது. மதத்தை வைத்தே ஆட்சி நடத்தி வருகிறார்கள். மோடியின் ஆட்சியில் எழுச்சி இல்லை. பின்னோக்கி தான் போய் கொண்டு இருக்கிறோம்.

இவர்கள் வந்த 10 மாதத்தில் இதுவரையில் மேக் இன் இந்தியாவில் ஒரு கம்பெனியை கூட கொண்டுவரவில்லை. துறைரீதியாக எதுவும் செய்யவில்லை. படிப்புரீதியாக ஒன்றும் செய்யவில்லை. மக்கள் நலனுக்கான எந்த திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை.

தேர்தல் சமயத்தில் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்று மக்களுக்கு தெரிய தொடங்கிவிட்டது. டெல்லி தேர்தலில் நரேந்திர மோடியே தெரு தெருவாக போனார். ஆனால் மோடி அலை என்னாச்சு என்று எல்லாருக்கும் தெரியும்.

கேள்வி:- தமிழக அரசு எப்படி செயல்படுகிறது?

பதில்:- ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகம் உள்ளது. பினாமி ஆட்சி நடக்கிறது.

கேள்வி:- எப்போது டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்திக்கப்போகிறீர்கள்?

பதில்:- வீடு இங்கே இருக்கிறது. மக்கள் இங்கே இருக்கிறார்கள். இதயம் இங்கே இருக்கிறது. வாழ்க்கை இங்கே இருக்கிறது. எனினும் டெல்லியில் வேலை நடக்கும். வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்திக்க உள்ளேன்.

Leave a Reply