கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பேசி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அப்போது உடனிருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னர் டெல்லியில் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியையும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களையும் பார்த்து வளர்ந்தவள். அப்படி இருக்க வேறு கட்சியில் இருந்தேன். எனினும், என் மனதில் ஏதோ உறுத்தலாகவே இருந்தது. இன்று காங்கிரஸில் இணைந்த பிறகு மனதில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.
சோனியாஜியின் வீட்டுக்கு சென்றபோது என்னை மிகவும் மதிப்புடன் வரவேற்றார். காங்கிரஸில் இணைந்தது மிகவும் பெருமையாகவும் உள்ளது. நாட்டுக்கு நல்லது செய்வதற்காக காங்கிரஸில் சேர்ந்துள்ளேன். கட்சி எனக்கு தரும் பணி தமிழகம் அல்லது வேறு எங்கு இருந்தாலும் அதனை மேற்கொள்வேன்.
கடந்த சில நாட்களாக குஷ்பு, பாஜகவில் இணைய போவதாக எழுந்த பேச்சு குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர் ஒரே பக்கமாக அடிக்கும் அலையுடன் போக வேண்டிய அவசியமில்லை. அதன் எதிர்ப்புறம் செல்வதில் தவறில்லை என்று கூறினார்.
இந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இளங்கோவன் ‘தமிழகத்தில் பாஜக புறக்கணிக்கப்பட்ட கட்சி. அதில் சேர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்று தெரிவித்தார். முன்னதாக குஷ்புவை அறிமுகப்படுத்திய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் தேசிய செயலாளருமான முகுல் வாஸ்னிக், திரை உலகின் ஒரு பிரபல நட்சத்திரம் என்றும் சமூக சேவகர் என்றும் குஷ்புவை குறிப்பிட்டார். குஷ்புவை காங்கிரஸ் மகிழ்வுடன் வரவேற்பதாகவும் கூறினார். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியான ஷோபா ஓஜாவும் உடன் இருந்தார்.