திமுகவில் இருந்து குஷ்பு திடீர் விலகல். பாஜகவில் சேர திட்டம்?

11திமுகவில் உண்மையாக உழைத்த தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக திமுகவின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து விலகுவதாகவும் நடிகை குஷ்பு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

11aநேற்று மாலை நடிகை குஷ்பு பத்திரிகையாளர்களிடம் தான் திமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘”என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.

ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுகவில் குஷ்புவின் அபார வளர்ச்சியை கருணாநிதி குடும்பத்தின் பெண்கள் விரும்பவில்லை என்றும், அவர் கனிமொழிக்கு போட்டியாக வளர்ந்துவிடுவார் என்பதால் கடந்த சில மாதங்களாக ஒதுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் மு.க.ஸ்டாலினுக்கும் குஷ்புவுக்கும் இடையே ஒருவித கசப்புணர்வு பல நாட்களாக தொடர்ந்து வந்தது. முன்னணி வார இதழ் ஒன்றுக்கு சில மாதங்களுக்கு முன் பேட்டியளித்த குஷ்பு, திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும்” என்று கொடுத்த சர்ச்சை பேட்டியால் அவரது வீடு தாக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். இந்நிலையில் குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் சேருவார் என கூறப்படுகிறது.

Leave a Reply