ஜெயலலிதா எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிட தயார். குஷ்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளருமான குஷ்பு போட்டியிடவில்லை என கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஆர்.கே.நகர் இல்லை. இந்த தொகுதி திமுகவிடம் உள்ளது. ஆனால் குஷ்பு இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக மேலும் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க உள்ளதாகவும், ஜெயலலிதாவை எதிர்க்கும் குஷ்புவுக்கு மேலும் சில கட்சிகள் ஆதரவு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, “காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தயார்’ என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். இன்று மாலை அல்லது நாளை திமுக வேட்பாளர் பட்டியல் வெளிவரவுள்ளது. அந்த பட்டியலில் ஆர்.கே.நகரில் திமுகவே போட்டியிடுகிறதா? அல்லது காங்கிரஸூக்கு விட்டுக்கொடுக்குமா? என்பது தெரியவரும்