‘தில் இருந்தா நேரா வந்து பேசு’. அகில இந்திய செயலாளருக்கு குஷ்பு சவால்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக, உள்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் வியூகம், கூட்டணி குறித்து சிந்தித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் கோஷ்டி பூசலில் சிக்கி கட்சிக்குள் இருக்கும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக குஷ்பு பிரச்சனை காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என கார்த்தி சிதம்பரமும், “ப.சிதம்பரம், தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை” என குஷ்புவும் மாறி மாறி தாக்கி வருவது காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், திருப்பூரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் குஷ்பு பேசியதாவது:
”தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவர் பெயரை சொல்ல கூடவிரும்பவில்லை. நான் தி.மு.க.வில் இருந்தேன். வெளியே வந்தேன். ஏன் வெளியே வந்தேன் என இதுவரை சொல்லவில்லை. கருணாநிதி மீது உள்ள பாசத்தால் சொல்லவில்லை.
ஆனால், ஏன் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தேன் என ஊருக்கே தெரியும் என ஹசீனா சொல்லி இருக்கிறார். உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசு. இப்படி பேப்பர்ல பேசுனா, பதிலுக்கு நானும் பேசுவேன். அப்புறம் நீ காணாம போய்டுவே. நான் அமைதியாதான் இருப்பேன். என்னை சீண்டினா புலியா மாறிடுவேன்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் அவர்களைத்தான் குஷ்பு இவ்வாறு தாக்கி பேசியுள்ளதாகவும் இதற்கு ஹசீனாவின் பதில் என்ன என்பதை அறியவும் ஊடகங்கள் காத்திருக்கின்றன.