நேற்று திருவண்ணாமலையில் நடந்த மே தினப் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரபல நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளருமான குஷ்பு பேசியபோது, ‘ஓடிப்போன காதலிக்கூட திரும்பி வருவா… போன கரண்டு திரம்ப வராது…!’ என்று பரபரப்பாக பேசினார்.
இந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது: “மத்தியில் ஆளும் மோடி அரசு, நிலம் கையப்படுத்துதல் சட்டத்தில் மாற் றம் செய்ய துடிக்கிறது. காங்கிரஸ் கட்சி, இந்த சட்டத்தை கொண்டு வந்தபோது, அனைத்துக் கட்சிகளின் கருத்துகளை கேட்டபிறகுதான் அமலுக்கு கொண்டு வந்தனர். தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி யும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஷும் அதில் கலந்துகொண்டு சிறப்பான சட்டம் என பாராட்டிவிட்டு தற்பொழுது மாற்றம் செய்ய முயற்சி செய்வது, முழுக்க முழுக்க பெரிய முதலாளிகளுக்கு பங்கு போட்டுக்கொடுக்கதான்.’
`நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலமாக விவசாயிகளின் நிலங்களை மட்டும் எடுக்க நினைக்கவில்லை. விவசாயிகளின் மானம், மரியாதை, சந்தோஷங்களை சேர்த்து எடுக்க முயற்சி செய்கின்றனர்.
மோடி ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 14 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா…? 325 கோடி ரூபாய். இவ்வளவு கோடிகளை செலவு செய்து வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் மோடி… சொந்த நாட்டுக்குள் ஏன் பயணம் செய்யமாட்டேன் என்கின்றார். ராகுல்காந்தி யை காணவில்லை என சொன்ன பி.ஜே.பிக்கு, அவர் வந்து கேட்கும் கேள்விகளுக்கு எதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர்.
மாநிலத்தில் நடக்கும் ஆட்சி பற்றி யாரோ ஒருவர் கோவில் சுவற்றில் எழுதிய வார்த்தைகளை பாருங்கள். `ஓடிப்போன காதலிக்கூட திரும்பி வருவா… போன கரண்டு திரம்ப வராது…
இந்த அம்மாவை மக்கள் முதல்வர்னு சொல்றாங்க. அவங்க ஆந்திராவுல சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்காக எழுதின கடிதத்தை படிச்சா… மக்கள் ஆறுதல் சொல்ற மாதிரி இல்ல… ஆந்திரா முதல்வரோட கைக்குலுக்குற மாதிரி இருக்கு”
இவ்வாறு குஷ்பு ஆவேசமாக பேசினார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “முன்பெல்லாம் திருவண்ணாமலை என் றால், அருணாச்சலேஷ்வரரும் ஆன்மீகமும்தான் பிரபலம். ஆனால் இன்று ஒரு அமைச்சர் கொள்ளை யடித்து சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருப்பதுதான் பிரபலமாகிவிட்டது. இன்னும் ஒரு அமைச்சர் பாக்கி இருக்கிறார் அவரும் கூடிய விரைவில் சிறைக்கு செல்வார். ஜெயலலிதா தியாகம் செய்தா ஜெயிலுக்கு சென்றார் ?… நாட்டை கொள்ளையடித்த காரணத்திற்காக ஜெயிலுக்கு போயிருக்கின்றார்”
“அ.தி.மு.க அமைச்சர்கள் கோவில் கோவிலாக சென்று பால் அபிஷேகம்,108 பசுக்களை வைத்து பூஜை என கோவிலே கதி என ஏன் இருக்கிறார்கள் என்றால் அம்மா விடுதலையாக வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் ஜெயலலிதா வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பூஜைகளை செய்கின்றனர்” என்றார்.