குஷ்பு காங்கிரஸ்காரரா? பாஜக அனுதாபியா? குவியும் புகார்கள்

குஷ்பு காங்கிரஸ்காரரா? பாஜக அனுதாபியா? குவியும் புகார்கள்

kushbooகுஷ்பு எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்துவது வாடிக்கை. அவர் திமுகவில் இருந்தபோது மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து கடும் கண்டனங்களை பெற்றதோடு கட்சியை விட்டே வெளியேறும் நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில் திமுகவில் இருந்து விலகி தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள குஷ்பு, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு முயற்சித்தார். ஆனால் அந்த பதவி கிடைக்காத நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் குஷ்பு இந்த சட்டத்தை ஆதரித்து பேசியுள்ளார். மேலும் முஸ்லீம்களில் ‘தலாக்’ விவாகரத்து குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் இந்த இரண்டு சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கூறியபோது:

”ஷரியத் சட்டத்தில் கூறப்பட்ட தலாக்கை ரகசியமாகச் சொல்வதுதான் தவறு. அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக ஷரியத் சட்டத்தையே தவறு என்பது சரியல்ல. இஸ்லாமில், ஆணுக்குச் சமமாக பெண்ணுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு தனக்குப் பிடிக்காத கணவனை மனைவியானவள் விவாகரத்து செய்ய விரும்பினால், இஸ்லாமிய சட்டப்படி ‘குலாஉ’ வாங்கிக்கொள்ளும் வழிமுறை உள்ளது.

ஷாபானு வழக்கு தொடங்கி தற்போது புனேவைச் சேர்ந்த அர்ஷியா பக்வான் என்னும் இஸ்லாமியப் பெண்ணின் விவாகரத்து வழக்கு வரை ஷரியத் சட்டமானது ஒழுங்காகக் கையாளப்படாததே பிரச்னை. ஆனாலும்கூட பெண்ணின் விருப்பம் என்ன? என்று கேட்காமல் எங்கும் விவாகரத்து அளிக்கப்படுவதில்லை. இந்துக்களுக்கான சட்ட முறைப்படி விவாகரத்து பெறுவது தற்போது எவ்வளவு கடினமாகி வருகிறது என்பது நாடறிந்த தகவல். இப்படியான சூழலில், இஸ்லாமியச் சட்டப்படியான விவாகரத்து முறை என்பது மிகத் தெளிவாக உள்ளது.

சொத்துரிமை உட்பட ஷரியத் சட்டத்தில் சிலபல மாற்றங்களைக் செய்து அதையே பொதுசிவில் சட்டமாகவும் கொண்டுவந்தால் ஏற்கலாம். மற்றபடி பி.ஜே.பி பொதுசிவில் சட்டத்தை இப்போது கையில் எடுத்திருப்பது வாக்கு வங்கி எண்ணிக்கையை கருத்தில் கொண்டுதான்” என்று கூறியுள்ளார்.

இதேபோல் இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் முகம்மது யூசுப் கூறுகையில், “குஷ்பு சொன்னது போல ஒரே நேரத்தில் தலாக் கொடுத்துப் பிரிவது இஸ்லாமில் கிடையாது. பெண்களுக்குப் பாதுகாப்பும் விவாகரத்தில் கூட சம உரிமையும் இஸ்லாமிய சட்டத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான மேம்படுத்துதல் மற்றும் விவாதத்தை கூட ஷரியத் சட்டம் அறிந்த அறிஞர்கள்தான் முன்னெடுக்க வேண்டுமே தவிர குஷ்பு இதுகுறித்து கருத்து சொன்னது கண்டிக்கத்தக்கது. தனியார் சட்டம் பொதுசிவில் சட்டமாக்கப்படவேண்டுமா என்பது குறித்துதான் தற்போது தொடர் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும் பொது சிவில் சட்டத்தைப் பற்றி அதனால் பாதிக்கப்படுபவர்கள்தான் விவாதிக்க வேண்டும். குஷ்புவுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. திருமண உறவுகள் பற்றியே தவறாகப் பேசியவர்தான் அவர். மேலும் அவர் காங்கிரசைச் சேர்ந்தவர்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த பி.ஜே.பி-யின் இறக்குமதிதான் குஷ்பு’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply