சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் அவர் முதல்வராக நீட்டிக்க வேண்டுமானால் ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ ஆக வேண்டும். இதற்காக தயாரான நிலையில் ஆர்.கே.தொகுதி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ததால் அந்த இடம் காலியாக உள்ளது. இந்த தொகுதியில் வெகுவிரைவில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க பலம் வாய்ந்த வேட்பாளரை எதிர்க்கட்சிகள் தேடி வருகின்றன.
இந்நிலையில் திமுகவில் சில ஆண்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு, ஆர்.கே. நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. இதற்கான ரகசிய பேச்சுவார்த்தையை திமுக தலைவரும், தமிழக காங்கிரஸ் தலைவரும் பேசி வருவதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியை பொறுத்தவரை குஷ்பு மீது எவ்வித கோபமும் இல்லை. அதேபோல் குஷ்புவும் மற்ற திமுக தலைவர்களை விமர்சனம் செய்தாலும், கருணாநிதியை மட்டும் விமர்சனம் செய்ய மாட்டார்.
ஜெயலலிதாவுக்கு போட்டியாக குஷ்பு நிறுத்தப்பட்டால் போட்டி கடுமையாக இருக்கும் என்றும், குஷ்புவுக்கு ஆதரவாக தேமுதிக, பாமக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பு இதுகுறித்து எவ்வித டென்ஷனும் இல்லாமல் ‘எங்கள் அம்மாவை எதிர்த்து யார் நின்றாலும், அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காத நிலையை உருவாக்குவோம்’ என்று கூறி வருகின்றனர்.