மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மத்திய சென்னை காங்கிரஸ் சார்பில் சென்னை அரும்பாக்கத்தில் கண்டனக்கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், நடிகை குஷ்பு உள்பட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குஷ்பு பேசியபோது:
தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இப்போதும் மின்வெட்டு தொடர்கிறது. என் வீடு இருக்கும் தெருவில் விளக்குகள் எரிவதில்லை. நிச்சயம் வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.
ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் தான்.
பா.ஜனதாவினர் மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகள் தான் வாங்கினார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசியதாவது:
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை. சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடும் நாங்கள் ஓட்டுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? அதனால் தான் ஸ்ரீரங்கம் தேர்தலில் நிற்கவில்லை.
வருகிற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு கட்டாயம் மந்திரி பதவி வழங்கப்படும். பட்ட மேற்படிப்புவரை அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்குவோம். மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியை காண மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என ஒவ்வொரு தலைவர்களும் பேசியபோது கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள் விழுந்து விழுந்து சிரித்ததாக தகவல்கள் கூறுகின்றன. டெபாசிட் கூட வாங்க முடியாது என்று பயந்துதான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்றும், இந்நிலையில் ஆட்சியை பிடிப்பது, குஷ்புவுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது போன்ற பேச்சுக்கள் நகைச்சுவையின் உச்சகட்டமாக இருந்ததாக பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.