குற்றம் கடிதல். திரைவிமர்சனம்.
பல விருதுகளை வென்று குவித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் பெரும்பாலான ஊடகங்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. பல விமர்சனங்கள் கூறுவது போல இந்த படம் அந்த அளவுக்கு தரமாக இருக்கின்றது என்பது உண்மைதானா? என்பதை பார்ப்போம்.
பிறந்த நாள் அன்று பள்ளியில் ஒரு மாணவிக்கு முத்தம் கொடுத்ததற்காக மெர்லின் என்ற ஆசிரியை மாணவன் ஒருவனை அடிக்கின்றார். அதனால் அந்த பையன் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு செல்ல, பள்ளி நிர்வாகம் பரபரப்பாகின்றது. ஆசிரியையை காப்பாற்ற துடிக்கும் பள்ளி நிர்வாகம், கோமாவில் இருக்கும் பையனின் உறவினர்களின் கோபம் ஆகியவை மாறி மாறி காண்பிக்கப்படுகிறது. இறுதியில் அந்த மாணவனுக்கு என்ன ஆயிற்று? மெர்லின் டீச்சருக்கு என்ன தண்டனை? என்பதை விளக்குவது தான் கதை.
ஆரம்பத்தில் மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி குறித்து ஆசிரியர், ஆசிரியைகள் மூலம் விளக்கும் இயக்குனர் பின்னர் அந்த கான்செப்டை அப்படியே விட்டுவிட்டு வேறு பிரச்சனைக்கு திடீரென தாவுகிறார். ஆசிரியை அடித்ததால் ஏற்படும் விபரீதம்தான் கதை என்றால் முதல் அரை மணி நேரம் காட்சிகள் எதற்கு? என்பது புரியவில்லை.
ஒரு அனுபவம் வாய்ந்த பிரின்ஸிபால், விபரீதம் ஏற்படும் என்று ஆசிரியையை ஊரை விட்டு போக சொல்கிறார். இது சரியான முடிவுதானா? என்பதை யோசிக்க வேண்டிய விஷயம். அந்த இடத்தில் உண்மையில் ஒரு அனுபவம் வாய்ந்த பிரின்ஸிபல், ஆசிரியைக்கு போலீஸ் பாதுகாப்புதான் கேட்டிருக்க வேண்டும்.
சாலையில் செல்லும் ஒருவனுக்கு அடிபட்டதற்கே பொங்கி எழும் அடிபட்ட மாணவனின் தாய்மாமா, சொந்த தங்கை மகன் கோமாவில் இருக்கும்போது காட்டும் உணர்ச்சிகள் குறைவாக இருப்பது ஏன்? என்று தெரியவில்லை.
தெரியாமல் அடித்துவிட்டோமே என்று துடிதுடிக்கும் ஆசிரியை நடிப்பு மனதை கலங்க வைக்கின்றது. அதேபோல் கிளைமாக்ஸில் அடிபட்ட மாணவனின் தாயின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்கும் இடத்திலும் கண்கள் குளமாகின்றன.
மற்றபடி படத்தில் பல இடங்களில் கிறிஸ்துவ மதத்தை பரப்பும் காட்சிகள் அதிகம். சொல்ல வந்த கருத்தை மதச்சாயம் கலக்காமலும் கூறியிருக்கலாம். சர்ச்சில் இருந்து வெளியே வரும் ஹீரோயின் குங்குமத்தை அழிக்கும் காட்சி தேவையா? என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னஞ்சிறு கிளியே பாடல் தவிர மற்ற பாடல்கள் படத்திற்கு தேவையில்லாதது. மாணவன் அடிபடும் வரை படம் மிக மெதுவாக நகர்கிறது. ஊடகங்கள் கொண்டாடும் அளவுக்கும், விருதுகளை குவிக்கும் அளவுக்கும் இந்த படத்தில் விஷயம் இருப்பதாக தெரியவில்லை. படிக்க வரும் மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகள் போல பார்த்து கொள்ள வேண்டும் என்ற கான்செப்ட் உண்மையாக இருந்தாலும், இயக்குனர் பிரம்மா சென்னையில் மாலை நேரத்தில் பேருந்தில் செல்லும் மாணவர்களின் அட்டகாசத்தை பார்த்திருக்க மாட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.