டெல்லியில் ‘மகளிர் மட்டும்’ மதுக்கடை. சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
மதுக்கடைகளை மூட வேண்டும், மதுவால் தாய்மார்கள் துயரப்படுகின்றார்கள் என்றெல்லாம் அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் மதுவுக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் போராடி வரும் நிலையில் பெண்களுக்கு என தனியாக மதுக்கடையை திறந்து சாதனை படைத்துள்ளது டெல்லி நகரம்,
தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு வன்முறைகள் பெருகி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடையின் விற்பனையாளர், உதவியாளர் உள்பட அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அனைத்து வகையான மது வகைகள் பெண்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ‘கொஞ்சம் கொஞ்சமாக மது இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்றுவேன்’ என அம்மாநில முதல்வர் கூறி இருக்கிறார். இதேபோல், சமீபத்தில் பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாரும், ஏப்ரலில் இருந்து மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறியிருந்தார்.
இதுபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுவுக்கு எதிரான போராட்டங்களும், குரல்களும் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், தலைநகர் டெல்லியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாங்கும் வகையில் மதுபான கடை திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு என தனியாக பேருந்துகள், பள்ளிகள், கல்லூரிகள் என இருக்கும்போது தனியாக மதுக்கடையும் தற்போது திறக்கப்பட்டுள்ளது எந்த வகையில் பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை பெண்களே தீர்மானித்து கொள்ளட்டும்.