சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 103-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர், பிராட்வே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சரிதா (28). இவர்களுக்கு நந்தினி (13), சந்தியா (11) என 2 மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம் நந்தினி, தனது தந்தை ரமேசுக்கு மதிய உணவு கொடுக்க பிராட்வே சென்று விட்டார். சந்தியா உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். சரிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 9 மணியளவில் ரமேசும், நந்தினியும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் வெளிக்கதவு மூடப்பட்டு இருந்தது.
சந்தேகமடைந்த ரமேஷ், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள் அறையில் இருந்த கட்டிலில் சரிதா மர்மமான முறையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
முத்தமிழ்நகர் பகுதிக்கு குடிவந்து 25 நாட்கள் தான் ஆகிறது. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வியாசர்பாடி ஜே.ஜே. நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தனர். அப்போது அந்த வீட்டின் உரிமையாளரின் மகனான இளையராஜா (25) என்பவருக்கும், சரிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இளையராஜாவின் வீட்டுக்கு தெரியவந்ததும், ரமேசை வீட்டை காலி செய்ய வைத்தனர். எனவே ரமேஷ் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடிபெயர்ந்தார்.
அங்கிருந்து கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் முத்தமிழ்நகர் பகுதிக்கு குடிவந்தனர். ஆனால் அதன்பிறகும் இளையராஜா, சரிதாவின் கள்ளக்காதல் தொடர்ந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் சரிதாவின் மகள் நந்தினியிடம் போலீசார் விசாரித்தபோது, நேற்று முன்தினம் காலை இளையராஜா தான் தங்கள் வீட்டுக்கு வந்து சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார், இளையராஜாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:
நேற்று முன்தினம் காலை சரிதா என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நானும் அங்கு சென்று, எனக்கு திருமணம் ஆக உள்ளது. இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதே எனக்கூறி விட்டு வந்தேன். மதியம் 1 மணியளவில் சரிதா, என்னை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு எனக்கு உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் செல்ல வேண்டும் என கூறினார்.
நான் அங்கு சென்ற போது, வீட்டில் சரிதா மட்டும் இருந்தார். அப்போதும்…
அவரிடம், என்னை தொந்தரவு செய்யாதே என்றேன். அதற்கு அவர், “வாழ்ந்தால் உன்னோடு தான் வாழ்வேன். இல்லாவிட்டால் செத்து விடுவேன்” என்றார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் நான் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்துவிட்டேன்.
சிறிது நேரம் கழித்து சரிதா, தவறான முடிவு எடுத்து விடக்கூடாது என்பதற்காக அவரை பார்க்க வீட்டுக்கு சென்றேன். அப்போது அவரது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி இருந்தது. சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து பார்த்த போது சரிதா, தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
அவரை மீட்டு கட்டிலில் படுக்க வைத்தேன். அவரது உடம்பில் எந்த வித அசைவும் இல்லாததால் அவர் இறந்து விட்டார் எனக்கருதி அவரது வீட்டு கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்று விட்டேன்.
இவ்வாறு இளையராஜா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சரிதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என இளையராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.