திடீரென வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன். ‘கிக்’ பட பிரச்சனை காரணமா?
பிரபல நடிகையும், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன், சமீபத்தில் வெளியான ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தன்னுடைய நிகழ்ச்சியை கிண்டல் செய்து படமாக்கியிருக்கும் இயக்குனருக்கும் அந்த காட்சியில் நடித்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்ஜே பாலாஜிக்கும் தனது டுவிட்டரின் மூலம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனின் கேள்விக்கு தான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் தான் இந்த படத்தில் ஒரு நடிகன் மட்டுமே என்றும் இயக்குனர் சொன்னதை தான் செய்ததாகவும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்திருந்தார்
இதுகுறித்து டுவிட்டர் பயனாளிகள் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்தனர். அவற்றில் பல லட்சுமிராமகிருஷ்ணனுக்கு எதிராகவே இருந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் தான் வெளியேறுவதாகவும், இதுவரை தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.