தந்தையின் மரணத்தில் சந்தேகம். லால் பகதூர் சாஸ்திரியின் மகன் மோடியிடம் கோரிக்கை

Sunil_Shastri_a5461இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் பிரதமர் பதவியை ஏற்ற ஜவஹர்லால் நேரு மறைந்த பின்னர் இரண்டாவது பிரதமராக பதவியேற்றவர் லால்பகதூர் சாஸ்திரி. இவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் கடந்த 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி அப்போதைய ரஷியாவின் தாஸ்கண்ட் நகரில் சுற்றுப்பயணம் செய்த போது திடீரென மரணம் அடைந்தார்.

அவர் மரணம் அடைவதற்கு முந்தைய நாள் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்று இரவு தாஸ்கண்ட் நகரில் ஓட்டலில் தங்கியிருந்த சாஸ்திரி தூக்கத்திலேயே மரணம் அடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

தாஸ்கண்ட் நகரம் தற்போது உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ளது. ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்ய சென்ற பிரதமர் மோடி முதலில் தாஸ்கண்ட் நகருக்கு போய் இறங்கினார். அங்கு சாஸ்திரியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சாஸ்திரியின் மகன் சுனில் சாஸ்திரி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வசிக்கிறார். பா.ஜனதா எம்.பி.யான அவர் பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் லால்பகதூர் சாஸ்திரியின் மரணம் பற்றிய ஆவணங்களை உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து பெற்று வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி சுனில்சாஸ்திரி கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாஸ்கண்ட் ஓட்டலில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே சாஸ்திரியின் மரணம் தொடர்பான ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட வேண்டும். முந்தைய காங்கிரஸ் அரசிடமும் இதுபோன்ற கோரிக்கை விடுத்தேன். ஆனால் காங்கிரஸ் அரசு மறுத்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply