ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ஆயிரக்கணக்கான கோடி முறைகேடு செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வரும் லலித்மோடி, அவ்வப்போது விடும் அறிக்கை மற்றும் டுவீட்டுகளால் இந்திய அரசியலில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. சமீபத்தில் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே, பிரியங்கா காந்தி உள்பட பல பெருந்தலைகள் லலித்மோடியால் உருண்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் ராகுல்காந்தியும் ராபர்ட் வதேராவும் லலித்மோடியுடன் நெருக்கமாக உள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
நேற்று லலித்மோடி தனது டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் லலித்மோடியுடன் பிரியங்கா காந்தியின் சகோதரரான ராகுல் காந்தியும், கணவரான ராபர்ட் வதேராவும் அருகருகே உட்கார்ந்து ஐ.பி.எல். போட்டியை ரசிப்பது போல் உள்ளது. அவர்களுக்கு பக்கத்தில் பல முக்கிய பிரமுகர்களும் அமர்ந்து இருக்கிறார்கள். இதில் லலித்மோடியும், ராகுல்காந்தியும் தங்களுடைய மொபைல்போன்களில் பேசிக் கொண்டிருப்பதுபோன்ற காட்சியும் காணப்படுகிறது.
இந்த வீடியோ காட்சிகளைவெளியிட்ட லலித்மோடி, ராகுல் காந்தியும், ராபர்ட் வதேராவும் எனது உபசரிப்பில் பயன் அடைந்தனர். அதை அவர்களால் மறுக்க முடியுமா? என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்னொரு டுவிட்டர் தகவலில், என்னுடனான இந்த சந்திப்பை ராகுல்காந்தியும், ராபர்ட் வதேராவும் கட்சியின் மேலிடத்துக்கு (சோனியாகாந்தி) தெரிவித்தார்களா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.