மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளரை அறிவித்தார் லாலு.
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், அன்புமணி, சீமான், தமிழிசை செளந்திரராஜன் என ஆறு முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், பிரதமர் வேட்பாளரை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இருக்கும் நிலையில் லாலு, பிரதமர் வேட்பாளர் என நிதிஷ்குமாரை அறிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இப்போதே திட்டமிடப்பட்டு வருவதாகவும், காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் களமிறக்கப்படுவார் என்றும் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் லாலு உறுதிபட கூறியுள்ளார்.
இதன்மூலம், பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து லாலு விலகி விட்டார் என்றே கருதப்படுகிறது. இதற்கு முன் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு தான் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் எனக் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.