பீகாரில் கடந்த 1990-களில் லாலு பிரசாத் யாதவ் முதல்-மந்திரியாக இருந்த போது, ரூ.37.7 கோடிக்கு மாட்டுத்தீவன ஊழல் நடந்ததாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
உடனே லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும் அதற்கான ஆவணங்கள், உத்தரவாதங்கள் மற்றும் நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.
அதன்படி, லாலு பிரசாத் சார்பில் தலா ரூ.25 ஆயிரத்துக்கான 2 ஜாமீன் ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 2½ மாத சிறைவாசத்துக்குப்பின் ராஞ்சி சிறையில் இருந்து அவர் நேற்று விடுதலையானார்.
அவருக்கு ராஷ்டிரீய ஜனதாதள தொண்டர்கள் சிறை வாசலில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், ‘மதசார்பற்ற சக்திகளை வலுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்யப்போவதாகவும், பா.ஜனதா மற்றும் நரேந்திர மோடியின் கனவுகளை நிறைவேற விடமாட்டேன்’ என்றும் கூறினார்.