நான் முதல்வராக இருந்திருந்தால் மாணவர்கள் பார்த்து எழுத புத்தகம் கொடுத்திருப்பேன். லாலு பிரசாத் யாதவ்

laluபீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் 10ஆம் வகுப்பு தேர்வில் ஏராளமான மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியால் காப்பியடித்து எழுதுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நான் முதல்வராக இருந்திருந்தால் மாணவர்கள் பார்த்து எழுத புத்தகமே கொடுத்திருப்பேன் என முன்னாள் முதல்வர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பீகார் மாநில தலைநகர் பாட்னா உள்பட பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வரும் 10ஆம் வகுப்பு தேர்வின்போது, காப்பியடிக்க மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் உதவி செய்த படங்கள் உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளிவந்து மானம் கப்பலேறி வரும் நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் பீகார் மாநில முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், இதுதொடர்பாக பக்சார் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ”சமீபத்தில், தேர்வின்போது மாணவர்களுக்கு பெற்றோர், பள்ளிக் கட்டடங்களின் மீது ஏறி நின்று காப்பி அடிக்க உதவி செய்யும் படங்கள் வெளியாகியுள்ளன. அதைக் பார்க்கும்போது, சுவர்களில் பல்லிகள் ஒட்டிக் கொண்டிருப்பது போலிருந்தது.

பீகார் மாநிலத்தில் தற்போது எனது அரசு மட்டும் இருந்திருந்தால், தேர்வின்போது மாணவர்கள் பார்த்து எழுத அவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டிருக்கும். புத்தகத்தைப் படித்தவர்களால் தான், அதைப் பார்த்து தேர்வை எழுத முடியும். புத்தகத்தை படிக்காதவர்கள், தேர்வு முடிந்த பிறகும், புத்தகத்தில் விடைகளைத் தேடிக் கொண்டுதான் இருப்பார்கள்” என்று பேசியுள்ளார்.

லாலு பிரசாத்தின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. மூத்த தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி ஆதரவு தந்துள்ளார். ”அமெரிக்காவில் உள்ள முக்கிய பல்கலைக் கழகங்களில் தேர்வின்போது புத்தகத்தைப் பார்த்து எழுதும் முறை உள்ளது. இதே வழக்கம், பிற நாடுகளிலும் உள்ளன. புத்தகத்தைப் படித்த மாணவர்களால் தான், விடைகளை தேடிக் கண்டுபிடித்து எழுத முடியும் என்ற கருத்து அந்நாடுகளில் உள்ளது” என்று கூறியுள்ளார். ஆனால், லாலுவின் கருத்துக்கு பீகார் மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் வினோத் நாராயண் கண்டனம் தெரிவித்து கூறுகையில், ”லாலு பிரசாத் இன்னும் மாறவில்லை. அவரது ரத்தத்தில் காட்டாட்சி ஊறியுள்ளது” என்றார்.

Leave a Reply