தோல் மருத்துவ சிகிச்சை என்றாலே, மாத்திரையும், களிம்பும் என்ற நிலையே இருந்தது. ஆனால் மருத்துவ முன்னேற்றம் காரணமாக தற்போது தோல் மருத்துவ சிகிச்சையிலும் லேசர் சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளன.
முகப்பரு, கரும்புள்ளி: சுமார் 15 வயது (டீன் ஏஜ்) முதல் 35 வயதினருக்கு அதிகமாகவும், அதற்கு மேலுள்ள வயதினருக்கு அரிதாகவும் ஏற்படும் பாதிப்பு முகப்பரு. இந்த பாதிப்பு தானாக வந்து தானாக மறையும் என்றாலும், அதன் தழும்புகள் நிரந்தரமாக இருக்கக்கூடியவை. ஆகவே முறையாக 3 முதல் 5 மாதங்கள் இதற்கு சிகிச்சை அவசியம்.
டீன் ஏஜ் பருவத்தினர் திருமணம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கானவர்களாக இருப்பதால் குறைந்த காலத்தில் பருக்களுக்கு சிகிச்சை பெற்று அதைத் தீர்ப்பது அவசியமாகிறது. ஆகவே லேசர் டோனிங் சிகிச்சை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சிகிச்சை மூலம் பரு, கரும்புள்ளிகள் மறைவதுடன் முகமும் புதுப் பொலிவு பெறுகிறது.
பச்சை குத்தும் பழக்கம்: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் பரவலாக இருந்தது. ஆனால், தற்போது ராணுவம், காவல்துறை வேலைவாய்ப்புகளுக்காகவும், திருமணம் போன்ற வைபவங்களின் போது பச்சை குத்தியது தடையாகிவிடக் கூடாது எனப் பலரும் கருதுகின்றனர். ஆகவே உடலில் பச்சை குத்திய நிலையில், அதை அழிக்கவும் விரும்புகின்றனர். ஆனால் 2 முதல் 4 மாதங்களுக்கு முன்பே சிகிச்சையை ஆரம்பித்து பச்சை குத்திய தழும்பை முற்றிலுமாக நீக்கலாம். உடனடியாக குறைந்த நாள்களில் பச்சை குத்திய தழும்பை நீக்கலாம் என்பது சரியல்ல.
பரு மற்றும் அம்மை நோய், அறுவைச் சிகிச்சையினால் உண்டான தையல் தழும்புகள், பிரசவத் தழும்புகள் எனப்படும் STRETCH MARKS போன்றவற்றை லேசர் சிகிச்சை மூலம் குறைக்க முடியும். 4 அல்லது 6 தடவை (சிட்டிங்ஸ்) லேசர் சிகிச்சை அளித்தால் நல்லது.
உடலில் தேவையற்ற இடத்தில் உள்ள முடிகளை லேசர் சிகிச்சை மூலம் அடையாளமின்றி நீக்கவும், குறைக்கவும் வழி உள்ளது. முகம் மற்றும் உடலில் உள்ள மச்சங்களையும், பிறவி மச்சங்களையும் லேசர் மூலம் நீக்க முடியும்.
தோல் மருத்துவ நிபுணரிடம்தான்…உடலில் தடிமனாக உள்ள keloid hypertropic scars போன்றவற்றையும் லேசர் சிகிச்சையால் குறைக்கலாம். முகப்பரு, கரும்புள்ளி நீக்கம் மற்றும் தழும்புகள் உள்ளிட்டவற்றுக்கான லேசர் சிகிச்சைகள் அனைத்துமே முறையான பயிற்சி பெற்ற தோல் மருத்துவரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
முறையான மருத்துவரில்லாத அழகு நிலையம் உள்ளிட்டவற்றில் சிகிச்சை பெறுவது உடல் நலத்துக்கு ஆபத்தையே ஏற்படுத்தும். மருத்துவர் ஆலோசனையின்றி பெறப்படும் முகப்பொலிவு கிரீம்கள் நல்லதல்ல. தோல் நோய்களுக்கு உடனடியாக தோல் சிகிச்சைக்கான மருத்துவ நிபுணரையே அணுகவேண்டும்.