நீதிமன்றத்தில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கும் நிலையில் லதா ரஜினிகாந்த் இதுகுறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லதா ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: கோச்சடையான் படத்துக்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்கிறவரிடம் வாங்கிய ரூ. 14 கோடியே 90 லட்சம் கடனுக்கு நான் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டதாகவும், அதில் 8 கோடியே 70 லட்சம் ரூபாயைத் தயாரிப்பாளர் முரளி மனோகர் திரும்ப அளித்ததாகவும், மீதமுள்ள தொகையைத் தராமல் இழுத்தடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகாமல் இருக்கு பொய்யான ஆவணங்களை அளித்து நீதிமன்றத்தில் தடை பெற்றதாகவும், அதற்காக என் மீது முதல் தகவலறிக்கையை பெங்களூர் போலீசார் பதிவு செய்துள்ளதாகவும் வெளியான செய்திகள் என் கவனத்துக்கு வந்தது.
இவை முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள். என் மீதும் என் குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பவும், குறுக்குவழியில் ஆதாயம் பெறவும் மேற்கொள்ளப்படும் முயற்சி. கோச்சடையான் கடனுக்காக நான் எந்த இடத்திலும் உத்தரவாதக் கையெழுத்துப் போடவில்லை.
அபிர்சந்த் நஹர் மற்றும் அவர் மனைவி சஞ்சல் நஹர் ஆகியோர் கிரிமினல் வழியில் எனக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து ஆதாயமடைய கடந்த ஓராண்டாகவே முயற்சித்து வருகின்றனர். அவர்களின் நெருக்கடிக்கு நான் பணியாததால், ஊடகங்கள் மூலம் விஷமத்தனமான பிரச்சாரம் மேற்கொண்டு என்னிடமிருந்து பணம் பெற முயற்சித்தனர். அந்தச் சூழலில்தான் பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தின் மூலம், இந்த தவறான பிரச்சாரத்துக்கு தடை பெற்றேன்.
இந்தத் தடைக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. நான் பொய்யான ஆவணங்களைக் காட்டி தடை உத்தரவு பெற்றதாக பிரச்சாரம் மேற்கொண்டு வாதாடினர். அவையும் எடுபடவில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே விதான் சவுதா காவல் நிலையத்தில், எனக்கு எதிராக அபிர்சந்தும் அவர் மனைவியும் புகார் கொடுத்தனர். அதுவும் தோல்வியில் முடிந்தது.
அவர்கள் புகார்கள் மோசடியானவை எனத் தெரிந்து கொண்ட போலீசார், இருவரையும் எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையில் வழக்கு நடைபெறும் எல்லை பெங்களூருக்குட்பட்டது அல்ல, சென்னை என்பதால் அந்தத் தடையை பெங்களூர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பை எனக்கு சாதகமாக வழங்கியது 22.04.2015 ஆம் நாள். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.
நிலைமை இப்படி இருக்க, உண்மையான தகவல்களை மறைத்து, மோசடியாக சில விஷயங்களைச் சித்தரித்து, எனக்கு எதிராக மீண்டும் பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
அபிர்சந்த் நஹர், சஞ்சல் நஹர் இருவரின் நோக்கமும் செயலும் மோசடியானது. தவறாகப் பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டது. சட்ட விரோதமானதாகும். ஒரு பிரபலம் என்பதைப் பயன்படுத்தி என் மீதும், என் குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பி நெருக்கடி தருவது சட்டப்படி குற்றம். இவர்களையும் இவர்கள் அவதூறுகளையும் நான் சட்டப்படி சந்திப்பேன். இருவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்படி தண்டனை பெறுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளேன். என் நற்பெயருக்கு சேதம் ஏற்படுத்தியதற்கான இழப்பீட்டையும் பெறுவேன் ” என்று கூறியிருக்கிறார்