உள்ளாட்சி தேர்தலுக்கு முன் ஸ்கூட்டியும் செல்போனும். முதல்வர் தீவிரம்
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் நூலிழையில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. இன்னும் பத்து தொகுதிகள் குறைவாக பெற்றிருந்தால் அதிமுக ஆட்சி அமைப்பதில் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கும். இந்நிலையில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும், வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களிடம் அதிருப்தி பெறாமல் இருக்கவும் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பெண்களுக்கான ஸ்கூட்டி மற்றும் செல்போன் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே தரவேண்டும் என்று முதல்வர் முடிவெடுத்துள்ளாராம். ஆனால் தமிழக நிதி நிலைமை இதற்கு இடம் கொடுக்காததால், நிதியை பெருக்க தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தலைமைச்செயலக அதிகாரி ஒருவர் கூறியபோது, “அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை களையெடுத்தால் போதுமான நிதி சேர்ந்துவிடும் என உறுதியாக நம்புகிறார் முதல்வர். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியை சிறப்பாகக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே சாத்தியம். இல்லாவிட்டால், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துவிட நேரிடும்.
எனவே அரசுக்கு வரி இழப்பை ஏற்படுத்துவதில் மிக முக்கியமான துறைகளான பத்திரப்பதிவு, வணிக வரித்துறை, கனிம வளத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சி.எம்.டி.ஏ) ஆகிய துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிதி இழப்பை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தந்த துறையின் அமைச்சர்களுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் துறை ரீதியான செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறையின் செயல்பாட்டுக்கும் மாதம்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, மதிப்பெண் வழங்குவது என துறையின் செயலர்கள் முடிவெடுத்துள்ளனர். இதில், நிர்வாகத்தில் அக்கறை காட்டாத அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதிச் சுமையைக் குறைப்பது, இலவசத் திட்டங்களில் கவனம் செலுத்துவது போன்றவைதான் தலைமைச் செயலக அதிகாரிகளின் முக்கிய டார்கெட்டாக உள்ளது” என்று கூறினார்.