சன் நெட்வொர்க் நடத்தி வரும் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதலை அடுத்த பத்தாண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்க சமீபத்தில் மறுத்து விட்டது. இதனால் சன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சன் நெட்வொர்க் உரிமையாளர்கள் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது நிலுவையிலுள்ள வழக்குகள் காரணமாகவே பாதுகாப்பு ஒப்புதல் வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இவ்விஷயத்தில் உள்துறை அமைச்சகத்துடன் முரண்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்தை அணுகி அதன் கருத்தைக் கேட்டபோது, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, “பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் அவர்கள் மீது இல்லை. ஊழல் தொடர்பான வழக்குகளே இருப்பதால், பாதுகாப்பு ஒப்புதல் வழங்கலாம். ஊழல் தொடர்பு இருப்பதால் அதனடிப்படையில் பாதுகாப்பு ஒப்புதல் வழங்காமல் நிராகரிக்க வேண்டியதில்லை” என கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் சட்ட அமைச்சகம் இவ்வாறு கருத்து கூறியிருந்தும் பாதுகாப்பு ஒப்புதலை சன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு வழங்கப்போவதில்லை என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “கருத்தை வெளியிடும் உரிமை உட்பட இவ்விவகாரத்தில் வெவ்வேறு கோணங்கள் உள்ளன. வெவ்வேறு அமைச்சகங்கள் வெவ்வேறு பார்வையைக் கொண்டிருக்கலாம். ஜனநாயகத்தில் இருவேறு அணுகுமுறைகள் இருப்பது சகஜமே. ஆனால், இறுதி முடிவு என்பது கூட்டாகச் சேர்ந்து எடுக்கப்படும்” என்றார்.