தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்றக் கோரி சென்னை மெரீனா கடற்கரை அருகில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடி மக்களின் நல்வாழ்விற்கு தமிழக அரசு முயல வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தை ஆனந்துடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை டிஜிபி அலுவலகம் முன்பு ஏப்ரல் 23-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நந்தினி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி உண்ணாவிரதம் இருக்க தனது தந்தை ஆனந்தனுடன் நேற்று காலை சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே தந்தையுடன் வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திய மெரினா காவல் நிலைய ஆய்வாளர் சிபுகுமார் மற்றும் போலீஸார் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.