பிரான்ஸ் அதிபர் தேர்தல்: வலது சாரி கட்சி வேட்பாளர் முன்னணி
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்களும் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் பிராங்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், வலது முன்னணி தேசியத் தலைவர் இம்மானுவேல் மேக்ரோன், புரட்சிகர இடது சாரி கட்சியைச் சேர்ந்த ஜீன் லூஸ் மேலென்கோன் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள முதல்கட்ட தேர்தல் முடிவின்படி வலது சாரி கட்சியைச் சேர்ந்த மரைன் லே பென் முன்னிலை வகித்து வருகிறார்.
வலதுசாரி கட்சியைச் சேர்ந்த மரைன் லே பென் 23.75 சதவீத வாக்குகளைப் பெற்று முதல் இடத்திலும், வலது முன்னணி தேசியத் தலைவர் இம்மானுவேல் மேக்ரோன் 21.53 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து லே பென் கூறுகையில், ”இந்த வாய்ப்பை பிரான்சு மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பிரான்ஸ் நாட்டின் நாகரீகம் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடக்கிறது. அப்போதுதான் முன்ணியில் உள்ள இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிய வரும்.