பழம்பெரும் வங்காள நடிகை சுசித்ரா சென் நுரையீரல் பாதிப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82
பழம்பெரும் வங்காள நடிகை சுசித்ரா சென், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தார். 1953ஆம் ஆண்டுமுதல் வங்காள மொழி படங்களில் கதாநாயகியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தேவதாஸ், ஆந்தி, அக்னி பரீஷா போன்ற பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
பிரபல வங்காள மொழி சாதனை இயக்குனர் சத்யஜித்ரேவின் படத்தில் நடிக்க அவர் மறுத்துள்ள செய்தி அப்பொழுதே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. சத்யஜித்ரே தனது படத்தில் நடித்து முடிக்கும்வரை வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகக்கூடாது என்று சொன்னதால் அவர் படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
1947ஆம் ஆண்டு சுசித்ரா சென், சென்னையில் தொழில்புரிந்துவந்த வங்காளர் திபாநாத் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்மூன் சென் என்ற மகள் உண்டு. அவரும் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
82 வயதான சுசித்ரா சென்னுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி நுரையீரல் தொற்றுநோய் ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சைக்கு பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவிர்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல வங்காள மற்றும் பாலிவுட் நடிகர், நடிகைகள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.