சுவாதி, வினுப்பிரியா மரணத்தால் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
கடந்த சில நாட்களாக தமிழகத்தை பெரும் பரபரப்பாக்கி வரும் இரண்டு சம்பவங்கள் சுவாதி கொலை மற்றும் வினுப்ப்ரியா தற்கொலை. இந்த இரண்டு சம்பவங்களிலும் பலியான இளம்பெண்களின் பெற்றோர்களுக்கு என்னதான் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் ஆறுதல் கூறினாலும் ஈடுசெய்ய முடியாத இழப்பைத்தான் அவர்கள் சந்தித்துள்ளனர்.
நாகரீகமான இண்டர்நெட் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம்மில் இன்னும் ஒருசில காட்டுமிராண்டிகள் வாழ்ந்து கொண்டிருப்பதை இதுபோன்ற சம்பவங்கள் உறுதிப்படுத்தி வருகின்றன. இந்த சம்பவங்களை அந்தந்த பொறுப்பில் உள்ளவர்கள் சரியாக செயல்பட்டிருந்தால் கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம் என்பதே சோகமான உண்மை.
ஒரு பிரச்சனை என்றால் குறிப்பாக இளம்பெண்களுக்கு பிரச்சனை என்றால் அவர்கள் உடனடியாக காவல்துறையினர்களை அணுகி தங்கள் பிரச்சனையை சொல்ல முன்வர வேண்டும். காவல்துறையினர்களும் காவல் நிலையத்தில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று பெயர்ப்பலகையில் மட்டும் எழுதியிருந்தால் போதாது. புகார் கொடுக்க வருபவர்களிடம் அவர்களின் பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்டு அதன்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். காவல்துறையினரிடம் சென்றாலே ஏகப்பட்ட டென்ஷன், லஞ்சம் உள்பட பலவித செலவுகள் மேலும் பத்திரிகைகளில் செய்தி வரும் போன்ற காரணங்களால் காவல்துறையினர்களை அணுக பல பெண்கள் முன்வருவதில்லை. முதலில் காவல்துறையினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயுள்ள இரும்புத்திரை விலக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் எவ்வித பயமும் இன்றி புகார் கொடுக்க முன்வருவார்கள்
வினுப்பிரியா சம்பவத்தில் அவருடைய பெற்றோர்கள் காவல்துறையினர்களிடம் புகார் கொடுக்க வந்தபோது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிக்க காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு உயிர் அநியாயமாக போவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் காவல்நிலைய ஆய்வாளரின் அலட்சியத்தால் இன்று ஒரு பெற்றோர் தங்கள் செல்ல மகளை இழந்து தவிக்கின்றனர். எஸ்.பியின் மன்னிப்பு, அரசின் நிவாரண உதவி ஆகியவைகளால் இந்த இழப்பை ஈடு செய்ய முடியுமா? தவறு செய்த அந்த ஆய்வாளருக்கு அதிகபட்சமாக இடமாற்றமோ அல்லது தற்காலிக பணிநீக்க நடவடிக்கையோ கிடைக்கும். இதனால் என்ன பயன்?
அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் கொஞ்சமாவது சமூக அக்கறை தேவை என்பதை சுவாதி கொலை சம்பவம் நிரூபித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் நடமாடும் ஒரு ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் ஒருவன் அரிவாளால் ஒரு பெண்ணை வெட்டிவிட்டு சர்வசாதாரணமாக தப்பித்துள்ளான் என்பதை நினைக்கும்போதே மனம் பதறுகின்றது. சக பயணிகள் நூற்றுக்கணக்கில் அந்த இடத்தில் இருந்தும் அந்த பெண்ணை காப்பாற்ற சிறிதுகூட முயற்சிக்கவில்லை என்பது கொடூரம் என்றால் வெட்டப்பட்டு துடித்துக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு முதலுதவி செய்யக்கூட ஒருவரும் முன்வரவில்லை என்பது கொடூரத்திலும் கொடூரம்
பீப் பாடல் முதல் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு சமூக வலைத்தளத்தில் பொங்கியெழும் இண்டர்நெட் பயனாளிகள், ஒரு கொடூரமான சம்பவத்தை நேரில் பார்க்கும்போது வாய்மூடி மெளனமாக இருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. ஒரு கம்ப்யூட்டரும் இண்டர்நெட் கனெக்ஷனும் இருந்துவிட்டால் உலக விஷயங்களை விடிய விடிய அலசும் நம்மவர்கள், எந்த நடிகர் பெரிய ஆள் என்று மணிக்கணிக்கில் விவாதம் செய்யும் நம் இளையதலைமுறையினர்கள், இதுபோன்ற கொடூர செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தினர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வது எவ்வளவு பெரிய மோசமான செயல் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். மேலும் சுவாதி கொலையில் அவர் மேல்ஜாதி பெண் என்பதால் அரசியல்வாதிகளிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை என்று இதில் ஜாதிப்பிரச்சனையை வேறு ஒருசில பிரமுகர்களே இழுத்துள்ளனர்.
டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது இந்தியாவே பொங்கி எழுந்தது. பாராளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ஆனால் சென்னையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த பெண்கள் இயக்கமும் போராட்டம் நடத்த முன்வராதது ஏன்? அரசியல்வாதிகளிலும் இந்த சம்பவத்தின் மூலம் அரசியல் லாபம் அடைவதற்காக அரசையும், காவல்துறையினர்கள் மீதும் குற்றம் சொல்வதையே குறிக்கோளாக வைத்துள்ளனர். எந்த அரசியல் கட்சியும் உண்மையான கண்டனத்தை தெரிவித்ததாக தெரியவில்லை.
ஒரு குற்றம் நடந்த பின்னர் திறமையான விசாரணையின் மூலம் குற்றவாளிகளை போலீசார் பிடிப்பதைவிட, குற்றம் நடைபெறும் முன்பே அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்க காவல்துறையினர் முன்வர வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாக உள்ளது. காவல்நிலையத்திற்கு வரும் புகார்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதோடு உடனுக்குடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை காவல்துறை மேலிதிகாரிகள் கொடுத்தால் அடுத்த சில மணி நேரங்களில் புகார் கொடுக்க அனைவரும் முன்வருவார்கள். இதன்மூலம் குற்றங்கள் நடைபெறும் முன்னே தடுக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. எனவே காவல்துறை உண்மையிலே பொதுமக்களின் நண்பன் என்பதை தங்கள் செயலில் நிரூபிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.