கொலஸ்ட்ரால், நம்முடைய ரத்தம் மற்றும் உடல் திசுக்களில் காணப்படும் மென்மையான, வழுவழுப்பான பொருள். இது, ரத்தத்தில் கரையக்கூடியது அல்ல.
ஹெச்.டி.எல் (ஹை டென்சிட்டி லிப்போபுரோட்டின்)
நல்ல கொழுப்பு என்று சொன்னால், எல்லோருக்கும் தெரியும். இது, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது.
எல்.டி.எல் (லோ டென்சிட்டி லிப்போபுரோட்டின்)
கெட்ட கொழுப்பு என்று அறியப்படுவது. இதுதான், ரத்தக் குழாய் சுவர்களில் படியக் கூடாது.
நம்முடைய இலக்கு: ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
கொழுப்பின் அளவு அதிகரிக்க காரணிகள்…
உடல் பருமன்: அதிக அளவில் உடல் எடை அதிகரிக்கும்போது, உடலில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது.
வயது: வயது அதிகரிக்கும்போது, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவும் அதிகரிக்கும்.
மரபியல்: அதிகக் கொழுப்பு அல்லது இதயப் பிரச்னைகள் பூர்வீகத்தில் இருந்தால், வாரிசுகளுக்கும் அபாயத்துக்கான வாய்ப்பு அதிகம்.
உணவு: ‘என்ன சாப்பிடுகிறோம் எனக் கவனியுங்கள்’ எனச் சொல்லக் கேட்டிருப்போம். அதிகக் கொழுப்புள்ள, சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் உள்ள உணவுகளைத் தவிர்த்துவந்தால், மொத்த கொழுப்பு அளவு குறையும். இது, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும்.
உடல் உழைப்பு: தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது, உடலில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்து, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான வாய்ப்பைக் குறைக்கும்.
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
கொழுப்பு, சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உணவுகளை வறுக்காமல், ஆவியில் வேகவைத்துச் சாப்பிட வேண்டும்.
தினசரி உணவில் அதிகப்படியாக பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருக்க வேண்டும்.
புகைத்தல், மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.