லிபியா பிரதமர் கடத்தல்

லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டது. அதன்பின் தலைமறைவான கடாபியை புரட்சியாளர்கள் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கண்டுபிடித்து அடித்து கொன்றனர்.

இதனால், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு இடைக்கால அரசு நிர்வாக பொறுப்பேற்றது. லிபியா பிரதமராக அலி ஜிடான் பொறுப்பேற்றார். அவர் திரிபோலியில் உள்ள கொரிந்தியா என்ற நட்சத்திர விடுதியில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த விடுதியில் நேற்று அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் ஓட்டலுக்குள் நுழைந்த மர்ம கும்பல், அலி ஜிடானை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. இதனால் பாதுகாப்பு வீரர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரை கைது செய்து அழைத்து சென்றதாக சிலர் கூறினர். ஆனால், பிரதமரை தீவிரவாதிகள் கடத்தியதாக நீதித் துறை அமைச்சர் கூறினார். சில நாட்களுக்கு முன்னர் தலைநகர் திரிபோலியில், அல் கய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரை அமெரிக்க படையினர் கைது செய்தனர். அதற்கு பழிக்கு பழியாக லிபியா பிரதமரை கடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

லிபியாவில் இடைக்கால அரசு அமைந்த பின்னும் இஸ்லாமிய புரட்சியாளர்களுக்கும், பழங்குடியின போராட்டக்காரர்களுக்கும் மத்தியில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பினரும் லிபியாவின் ஒவ்வொரு பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அரசியல் காரனங்களால் பிரதமர் கடத்தப்பட்டிருக்கிறார். அவரை விடுவித்து விட்டதாக மர்ம கும்பல் கூறினாலும் பிரதமர் எங்கிருக்கிறார் என்பது தெரியாததால், அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply