எல்.ஐ.சி. தலைவர் திடீர் ராஜினாமா? புதிய தலைவர் யார்?
எல்.ஐ.சி என்று கூறப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.கே.ராய், தனது பதவியை நேற்று திடீரென ராஜிநாமா செய்துள்ளார். அவருடைய பதவிக் காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1981-ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தில் பணியில் இணைந்த எஸ்.கே.ராய், பல்வேறு உயர் நிலைப் பொறுப்புகளை படிப்படியாக வகித்து கடந்த 2013-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக் காலத்தில், எல்ஐசி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
அவரது பதவிக் காலம் வரும் 2018 வரை உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் தனது பொறுப்பிலிருந்து எஸ்.கே.ராய் விலகியுள்ளார். இதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. தனது ராஜிநாமா கடிதத்தை மத்திய நிதியமைச்சகத்துக்கு அவர் அனுப்பியதாகவும், அந்த கடிதத்தை நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு நிதியமைச்சகம் அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராயின் ராஜிநாமா ஏற்கப்பட்ட பிறகு புதிய தலைவரை நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.