ஆயுள் காப்பீட்டுதாரர், தனது மறைவுக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்கள் பாலிசியை கிளெய்ம் செய்யும்போது சிக்கல் ஏற்படாதிருக்க வேண்டும் என்று நினைத்தால் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
அவை என்னென்ன?
கே.ஒய்.சி. அப்டேட்:
நாம் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கும்போது நமது, அதாவது காப்பீட்டுதாரரின் பெயர், முகவரி ஆகியவற்றைக் கொடுத் திருப்போம். இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதை உடனடியாக காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இதை கே.ஒய்.சி. படிவத்தில் மாற்றி வைப்பது நல்லது.
‘வாரிசு’ அப்டேட்:
பாலிசியில் நாமினியாக, அதாவது வாரிசாக நியமிக்கப்பட்டவர் பாலிசிதாரருக்கு முன்பே இறந்துவிட்டால், பாலிசியின் நாமினி இறந்துவிட்டார் என்பதைத் தெரிவித்து புதிய நாமினியை நியமிப்பது அவசியம்.
ஆவணங்களைச் சரியாக ஒப்படைத்தல்:
எண்டோமென்ட், மணிபேக் போன்ற பாலிசிகளை முதிர்வுத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது அசல் காப்பீட்டு பத்திரம், வங்கிக் கணக்கு எண், வங்கி விவரம் ஆகியவற்றை முழுமையாகக் கொடுத்து கிளெய்ம் செய்ய வேண்டும். அதுவும் பாலிசி முடிந்த ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிப்பது நல்லது. ஒருவேளை பாலிசி பத்திரம் தொலைந்திருந்தால் அதற்காக முன்கூட்டியே விண்ணப்பித்து நகல் பத்திரம் வாங்கி வைத்திருப்பது அவசியம்.
குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்தல்:
பாலிசி எடுத்தவுடன் அது குறித்த தகவல்களை குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பது முக்கியம். அதாவது பாலிசியின் பெயர், கவரேஜ் தொகை, பாலிசியின் கால அளவு, ஏஜென்ட் பெயர், அவரை தொடர்புகொள்வது எப்படி, பாலிசி எடுத்த நிறுவனம், அந்த நிறுவனத்தின் முகவரி ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். அதேபோல அந்தத் தகவல்களை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதிவு செய்து வைப்பதும் முக்கியம்.
தகவல்களை அப்டேட் செய்தல்:
பாலிசிதாரர் இறந்துவிட்டால் அந்தத் தகவலை காப்பீடு எடுத்த நிறுவனத்துக்கு உடனடியாகத் தெரிவிப்பது அவசியம். இதை எந்தவிதமான தாமதமும் இல்லாமல் செய்ய வேண்டும். வாரிசுச் சான்றி தழை சமர்பிப்பது முக்கியம்.