உயிருக்கு ஆபத்தான நீரிழப்பு: நாமே தற்காத்துக்கொள்ளலாம்

neer_2486160f

நீருட்டபான விழிப்புணர்வு நாள் ஜூலை 29

நம் உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. உடலுக்குத் தேவைப்படும் நீரின் அளவுக்கும் வெளியேறும் நீரின் அளவுக்கும் இடையே ஏற்படும் சமச்சீரற்ற நிலையே நீரிழப்பு எனப்படுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும்போது ஒருவருடைய உடலிலிருந்து நீர் அதிகமாக வெளியேறும். வயிற்றுப்போக்கு நீருடன் இருந்தால், நீரிழப்பு ஏற்படலாம்.

மனித உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை உடனடியாகத் தெரிவிக்கும் சமிக்ஞைகள்தான் நாவறட்சியும் தண்ணீர் தாகமும். வாந்தியுடன் வயிற்றுப்போக்கும் சேர்ந்துகொள்ளும். பெரியவர்களுக்கு இந்த உபாதை ஏற்படுகிறது என்றால், உடனே அதற்கான சிகிச்சையை அவர்களால் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், குழந்தைகளுக்குச் சொல்லத் தெரியாது என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உடலில் போதிய நீர் இல்லாத காரணத்தால் வயிற்றுப்போக்கு தீவிரமாகிக் குழந்தைகள் மரணமடைவதற்குக்கூட வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிறந்த ஆறு மாதக் குழந்தையிலிருந்து எந்த வயதில் இருப்பவரையும், நீரிழப்பு செயலிழக்க வைத்துவிடலாம்.

நீரிழப்பைத் தடுக்கும் வழிகள்

வாந்தியுடனோ, வாந்தி இல்லாமலோ வயிற்றுப்போக்கு உள்ள ஒருவருக்கு அதிக அளவில் திரவ உணவுகளை அல்லது நீரூட்டபானங்களை ஆரம்பத்திலேயே கொடுத்தால் நீரிழப்பைப் பெரும்பாலும் தடுத்துவிடலாம். குறிப்பாக, நீராக மலம் கழிக்கிற சிறு குழந்தைகள் விஷயத்தில் அடிக்கடி தாய்ப்பால் ஊட்டுவது நல்லது.

நீரிழப்புக்குள்ளான ஒருவர் தண்ணீர், தேநீர், சூப், கஞ்சி போன்ற திரவ உணவு வகைகளை நிறைய குடிக்க வேண்டும். நீரூட்டபானம் சிறந்தது.

நீரிழப்புக்கு ஆளானவர், வழக்கம் போலச் சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்வரை இரவும் பகலும் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை அவருக்கு நீரூட்ட பானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும். பெரியவர்களுக்கு 3 லிட்டர் அல்லது அதற்கு அதிகமாகவும் சிறு குழந்தைகளுக்குக் குறைந்தது 1 லிட்டரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.

நோயாளி வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாலும், இந்த நீரூட்ட பானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். நீரிழப்புக்கு உள்ளானவரால் தேவையான அளவு நீரூட்ட பானத்தைக் குடிக்க முடியாவிட்டால், அல்லது அவர் குடித்த அனைத்தையும் வாந்தி எடுத்தால், சிரைவழியாக நீரூட்டக் கரைசலைச் செலுத்துவதற்கு நலப்பணியாளர் ஒருவரை நாட வேண்டும்.

எச்சரிக்கை:

நீரிழப்பு ஏற்பட்டு நிலைமை மோசமாகி, ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ உதவியை நாடவும்.

நீரூட்டபானத்தை வீட்டிலேயே தயாரிக்கும் முறை

1. உப்பு, சர்க்கரை (வெல்லம், சீனி) நீர் 1 லிட்டர் கொதித்து ஆறிய தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும். எலுமிச்சைச் சாறு, மோர், இளநீர், ஜவ்வரிசிக் கஞ்சித் தண்ணீர் போன்றவையும் உதவும்.

அரை கிண்ணம் பழச்சாறு, தேங்காய் தண்ணீர் அல்லது மசித்த வாழைப்பழம் ஆகியவற்றில் எது கிடைக்கிறதோ அதைச் சேர்க்கவும். இதனால் குழந்தையைச் சாப்பிடத் தூண்டும் பொட்டாசியம் கிடைக்கும்.

2. மாவுடன் உப்பு (அரிசி மாவு அல்லது வேறு தானிய மாவு, சமைத்த, வேகவைத்த உருளைக் கிழங்கு) 1 லிட்டர், கொதித்து ஆறிய தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்புடன் 8 தேக்கரண்டி மாவு (2 கைப்பிடி) ஆகியவற்றை 5 முதல் 7 நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்துக் கஞ்சி தயாரிக்கவும். அதைக் குளிர வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைக்குத் தரவும்.

எச்சரிக்கை:

ஒவ்வொரு தடவை தரும்போதும், முதலில் அது கெட்டுப் போகாமல் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளவும். கஞ்சி சீக்கிரத்தில் கெட்டுப்போக வாய்ப்பு உண்டு.

அம்மாக்களுக்கு சில யோசனைகள்

4-6 மணிவரை நீரூட்டபானம் தந்தும், வயிற்றுப்போக்கு தொடர்ந்தால் அதற்குப் பிறகும் நீரூட்டபானத்தைத் தர வேண்டும்.

3-4 மணிக்கு ஒருதடவை சுத்தமான, மென்மையான உணவு தரப்பட வேண்டும்.

தொடர்ந்து தாய்ப்பால் தர வேண்டும்.

அதிக வயிற்றுப்போக்கு, அதிக தாகம், கண் குழி விழுந்து போதல், காய்ச்சல், சரியாகக் குடிக்க, உண்ண முடியாத நிலை, வயிற்றுப்போக்கு குணமாகாத நிலையில் குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்லவும்.

Leave a Reply