லண்டனில் பினாமி பெயரில் சொத்தா? ராபர்ட் வதேரா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு

லண்டனில் பினாமி பெயரில் சொத்தா? ராபர்ட் வதேரா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு
vadra
சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, ஏற்கனவே ஹரியானா மாநிலத்தில் நில மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது லண்டனில் பினாமி பெயரில் விலைமதிப்புள்ள சொத்து ஒன்றை வாங்கியிருந்த விபரம் தெரிய வந்துள்ளது.

லண்டனில் ஆப்சன் இந்தியா சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை இந்தியாவை சேர்ந்த சஞ்சய் பண்டாரி நடத்தி வந்தார். இவருடைய நிறுவனத்தில் ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனையில் மோசடி நடந்திருப்பதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து, இந்தியாவில் பண்டாரிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் அதில் ஒன்று பண்டாரிக்கும், ராபர்ட் வதேராவுக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி லண்டனில் பிரையான்ஸ்டன் ஸ்கொயர் என்ற சொத்தை சாட்டா என்பவர் பெயரில் ராபர்ட் வதேரா வாங்கியிருக்கலாம் என்றும், அந்த கட்டடத்தை மறுசீரமைப்பது முதல் பழுதுபார்த்தல், அலங்கரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் பண்டாரா, ராபர்ட் வதேராவுக்கு மெயில் மூலம் தகவல்களை அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆயினும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இதில் சிறிதளவும் உண்மையில்லை என்றும் ராபர்ட் வதேரா தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply